
மங்கலம்,
திருப்பூரில் பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "ஆந்திரபிரதேசம் சித்தூர் முட்டுகூர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி அம்மு. இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் இடுவாய் சீரங்ககவுண்டம்பாளையம் அருகே உள்ள தனியார் சைசிங் மில்லில் வேலை செய்து வருகிறார்கள். இவர்களது மகள் வேலூர் கோஷப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அங்கு 11-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி கோடை விடுமுறையையொட்டி இடுவாய் சீரங்ககவுண்டம்பாளையம் வந்து பெற்றோருடன் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. ஆவலோடு தேர்வு முடிவுகளை பார்த்த மாணவி வேதியியல் பாடத்தில் தேர்ச்சி பெறாததால் அழுது கொண்டிருந்தார். உடனே அவரது பெற்றோர் மாணவிக்கு ஆறுதல் கூறியதோடு, துணைத் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என அவரை தேற்றினர்.
பின்னர் அவர்கள் வேலைக்கு சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது வீட்டில் மாணவியை காணவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடினர். இதற்கிடையில் அந்த பகுதியில் உள்ள கிணற்றின் அருகே அவரின் காலணி கிடந்தது.
தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலைய அதிகாரி மோகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி மாணவியை தேடினார்கள். 3 மணி நேர தேடலுக்கு பிறகு இறந்த நிலையில் மாணவியின் உடல் மீட்கப்பட்டது.
இதையடுத்து மகளின் உடலை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்ததால் கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.