நன்றி குங்குமம் டாக்டர்
உளவியல் மருத்துவர் மா . உஷா நந்தினி
செவ்விது செவ்விது பெண்மை!
‘‘நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே ….. தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே’’ என்று வைரமுத்து எழுதி A.R.ரகுமான் இசையமைத்த பாடலை ரசிக்காதவர்கள் மிகக் குறைவு. இந்தப் பாடல் தெரியாதவர்கள், பள்ளி பருவத்தில் நாம் படித்த நீர்ச்சுழற்சி பாடத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். ஏன் என்றால் பெண்ணின் வாழ்க்கையும் ஒரு சுழற்சிதான். அதனாலேயே பிறப்பிலிருந்து ஐந்து வயது அதாவது பேதை பருவம் வரையிலான உடல்நலவியலை புரிந்து கொள்ள நாம் இவளது அம்மாவின் பதின் பருவ காலத்து உடல்நலவியலிலிருந்து பார்க்கவேண்டும்.
சுலபமாக புரிந்துகொள்வதற்காக நாம் இந்தப் பகுதியில் பார்க்கும் குழந்தையை ‘பாப்பா’ என்றும் அவளை பெற்று எடுத்த தாயை ‘அம்மா’ என்றும் குறிப்பிடுவோம். பாப்பாவின் பிறந்த எடை, பிறக்கும்பொழுது உள்ள இரத்த கூறுகள், உடல் உறுப்புகளின் நிலை, மூளை வளர்ச்சியின் நிலை, பால் குடிக்கும் திறன் என்று அத்தனையும் பாப்பா அம்மாவின் வயிற்றில் வளரும் பொழுதே நடந்து விடும்.
இது சீராக நடக்க அம்மாவின் 13-14 வயதிலிருந்தே அவளது உடல்நலத்தை பேணிக்காக்க வேண்டும். அந்த பதின் பருவத்திலேயே அவள் இரத்த சோகை வராமல் உடல் எடை மிக குறைவாகவோ கூடுதலாகவோ இல்லாதவாறு போஷாக்கான உணவுமுறையைக் கையாள வேண்டும். ஒருவேளை இந்த வயதிலேயே இரத்த சோகை இருந்தால், அவள் கருத்தரித்தப்பின் இரத்த சோகை இன்னும் மோசமாக ஆகிவிடும்.
போதுமான அளவுக்கு இரத்த அணுக்கள் இல்லாமல் பாப்பாவுக்குப் போக வேண்டிய போஷாக்கில் குறை ஏற்படும். இதனால் உறுப்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி என்று எல்லாமே பாதிக்கப்படும். ஐம்பது கிலோவைவிட எடை குறைவாக உள்ள அம்மாக்களுக்கு எடை குறைவாக (Low Birth Weight ) பாப்பா பிறக்க வாய்ப்பு அதிகம். (சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்).
உடலின் எடை அதிகமாக இருக்கும் பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் (Gestational Diabetes, Gestational Hypertension ) போன்ற பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவை பிறக்கும் குழந்தையின் உடல் நலனை பாதிக்கும். ஆகவே பதின் பருவத்திலிருந்தே பெண்களின் உடல்நலனை பாதுகாப்பது அவர்களின் குழந்தையின் உடல்நலன் நன்றாக அமைய முக்கியமானது.
ஒரு பெண் தான் கர்ப்பமாக வேண்டும் என்று முடிவெடுத்த உடனேயே, நமது அரசு ஃபோலிக் அமிலம் (Folic acid) எனப்படும் வைட்டமின் சத்து மாத்திரையை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறது. இது ஏன் என்றால் நமது ஊர்களில் மாதவிடாய் வராமல் நின்ற சில நாட்களிலேயே மருத்துவரை அணுகி கர்ப்பத்திற்கான பரிசோதனைகளை செய்யும் பழக்கம் இன்னும் முழுமையாக வரவில்லை.
முதல் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு (சில சமயம் பத்து மாதங்களுக்கு கூட) தான் கர்ப்பமாக இருப்பதை வெளியில் (மருத்துவரிடம்கூட ) சொன்னால் கண் திருஷ்டி பட்டு விடும் என்ற எண்ணத்தில் மூடி மறைக்க பார்ப்பார்கள். கண் திருஷ்டி படுகிறதோ இல்லையோ, குழந்தையின் உறுப்பு வளர்ச்சி (Organogenesis) முதல் மூன்று மாதங்களிலேயே முக்கால்வாசி முடிந்து விடுகிறது.
இந்த சமயத்தில் முதுகுத் தண்டு மற்றும் மூளை சீராக வளர இந்த ஃபோலிக் அமிலம் (Folic Acid) எனப்படும் வைட்டமின் தேவைப்படுகிறது. அறிவியல் ரீதியாக இந்த சத்து குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும்தான் மேற்கத்திய நாடுகளில் கொடுப்பார்கள். ஆனால் நமது அரசாங்கம் இதை எல்லா கர்ப்பிணிப் பெண்களுக்கும் கொடுக்க சொல்கிறது. ஏன் என்றால் நமது நாட்டில் இந்த சத்துக் குறைபாடு ஏறத்தாழ அனைத்து பெண்களுக்கும் உள்ளது.
அதோடு நாலு ஐந்து மாதம் கழித்து இந்த கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரிடம் செல்லும்போது, இந்தக் குறைபாடு இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிப்பதற்குள் குழந்தையின் உறுப்புகள் முழுமையாக வளர்ந்துவிடும் என்பதால், அதற்குள்ளேயே முதுகு தண்டுவடம் மற்றும் மூளையின் வளர்ச்சியில் இந்த வைட்டமின் குறைபாடால் ஏற்படும் பிரச்னைகள் வந்து விடும்.
பிறகு மாத்திரை கொடுத்தாலும் ஒன்றுதான் கொடுக்க விட்டாலும் ஒன்று தான் (இதற்குப்பின் வயசுக்கு வந்தால் என்ன வரலைன்னா என்ன என்ற காமெடி போல தான்). அதனால்தான் கர்ப்பமாக முயற்சிக்கும் அனைத்து பெண்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.
இதுபோல் அம்மாவின் உடல்நிலை நன்றாக இருக்கும் எனில், காய்ச்சல் ஏதும் வராமல், மருதுகள் தேவையில்லாமல் மறுத்த்துவரின் பரிந்துரையின்றி எடுத்துக்கொள்ளாமல் இருக்கும் அம்மாவுக்குப் பிறக்கும் பாப்பாவின் உடல் நலம் நன்றாக இருக்கும். குறைந்த பட்சம் 2.5 கிலோவிற்கு மேல் எடை இருப்பது அரிது. பிறந்த உடனே குழந்தைகள் நல மருத்துவரிடம் குழந்தையைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
அந்த மருத்துவர் குழந்தையின் எடை, அழுகையின் வீரியம், சுவாசிக்கும் திறன், நிறம் (கருப்பா, சிவப்பா என்பது அல்ல, நீலமாக – Cyanosis வந்துள்ளதா என்று கண்டறிய), இருதய துடிப்பு என்று எல்லாம் சீராக உள்ளதா என்று பார்ப்பார். இதை APGAR ஸ்கோர் என்று சொல்லுவார்கள். இதை பிறந்த உடனே மற்றும் சில நிமிடங்கள் கழித்துப் பார்ப்பார்கள். இந்த ஸ்கோர் நன்றாக இருப்பது, பிறந்த குழந்தையின் உடல் நலம் சீராக இருப்பதன் அடையாளம். (பிறந்த உடனேயே இந்த உலகம் ஸ்கோர்/மார்க் என்று குழந்தையை பரிசோதிக்கிறது என்று நகைப்பதும் உண்டு). முதல் 30 நாட்கள் மற்றும் முதல் ஒரு வருடம் மிக முக்கியமானது. ஏதேனும் உடல் உபாதைகள் இருந்தால் வேகமாக சீர் செய்ய வேண்டும்.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எல்லாமே சீராக உள்ளதா என்று மருத்துவர்கள் திரும்ப திரும்ப பார்ப்பது அதனால்தான். VACTERL என சொல்லப்படும் முதுகுத் தண்டுவடத்தில் குறைபாடு, ஆசனவாய் துவாரமின்மை, இருதயத்தில் குறைபாடு, உணவுக் குழாய் மற்றும் சுவாசக் குழாய் ஒட்டி இருப்பது, சிறுநீரகக் குறைபாடு, கை-கால் குறைபாடு – இதில் ஏதேனும் ஒன்று இருந்தாலும், மற்றவை இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பது முக்கியம்.
இதையெல்லாம் பார்த்த பிறகு வைட்டமின் கே என்ற ஊசி போடவேண்டும். இந்த வைட்டமின் அம்மாவின் இரத்தத்திலிருந்தோ தாய்ப்பாலிலிருந்தோ கிடைக்காததால் ஊசியாக போடுவது குழந்தையின் இரத்தம் உறைய மிக முக்கியம் ஆகும். பிறகு தடுப்பூசிகளையும் அந்த அந்த காலத்திற்கு ஏற்றவாறு போடவேண்டும். ஆண் குழந்தையானாலும் பெண் குழந்தையானாலும் இவையெல்லாம் ஒருபோல தான் இருக்கும். போடவேண்டிய தடுப்பூசிகள் அட்டவணையை உங்கள் கவனத்திற்காக இணைத்துள்ளேன்.
The post பிறப்பிலிருந்து பேதை வரை appeared first on Dinakaran.