ராவல்பிண்டி: 8 அணிகள் பங்கேற்றுள்ள 9வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் ராவல்பிண்டியில் நேற்று நடந்த போட்டியில் ஏ பிரிவில் நியூசிலாந்து- வங்கதேசம் மோதின. முதலில் பேட் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 236 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 77, ஜாக்கர் அலி 77 ரன் எடுத்தனர். நியூசிலாந்து பவுலிங்கில் மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் வில்யங் 0, கேன் வில்லியம்சன் 5 ரன்னில் வெளியேற டோவன் கான்வே 30, டாம் லாதம் 55 ரன் அடித்தனர். ரச்சின் ரவீந்திரா 105 பந்தில் 112 ரன் விளாசினார். 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 240 ரன் எடுத்து நியூசிலாந்து வெற்றிபெற்றது. மைக்கேல் பிரேஸ்வெல் ஆட்டநாயகன் விருது பெற்றார். முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து 2வது வெற்றியுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றதுடன் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பும் உறுதியானது.
2 தோல்விகளை சந்தித்த நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்கதேச அணிகள் வாய்ப்பை இழந்தன. இந்த பிரிவில் கடைசி லீக் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து வரும் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன. அட்டவணை மோதலாக அமைந்துள்ள இந்த போட்டியில் வெல்லும் அணி ஏ பிரிவில் முதலிடம் பிடிக்கும். வெற்றிக்கு பின் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் கூறுகையில், அரையிறுதிக்கு தகுதி பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. வங்கதேசம் சவாலாக இருக்கும் என்பதை அறிவோம். ஒருநாள் போட்டிகளில் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது கடினம். பிரேஸ்வெல் பவுலிங் ஆச்சரியமாக இருந்தது. அவர் இப்போது ஒரு தரமான பந்துவீச்சாளர். ஐசிசி தொடரில் ஆடுவதை ரச்சின் விரும்பினார். அவர் பார்முக்கு வந்துவிட்டால் நிறுத்துவது மிகவும் கடினமாக இருக்கும், என்றார்.
The post பிரேஸ்வெல் தரமான பந்துவீச்சாளர்: கேப்டன் சான்ட்னர் பாராட்டு appeared first on Dinakaran.