பிரேமலதா தலைமையில் வரும் 30ம் தேதி தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது: விஜய பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்க திட்டம்

6 hours ago 1

சென்னை: தேமுதிக செயற்குழு, பொதுக்குழு வருகிற 30ம் தேதி கூடுகிறது. இதில் விஜய பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது. பாலக்கோடு வெள்ளிச்சந்தை கே.வி.மஹாலில் நடைபெறும் கூட்டத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை வகிக்கிறார். இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்ல் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக தலைமையிலான அணியில் தேமுதிக இடம் பெற்றது. அந்த தேர்தலில் தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. மேலும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஒதுக்க அதிமுக சம்மதித்ததாக பிரேமலதா கூறி வந்தார். ராஜ்யசபா தேர்வுக்கான நாள் வரும்போது, தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று கூறி வந்தார்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநிலங்களவை உறுப்பினர் பற்றி நாங்கள் ஏதும் சொன்னோமா? யார் யாரோ சொல்வதை எல்லாம் எங்களிடம் கேட்க வேண்டாம். நாடாளுமன்றத் தேர்தலின் போது வெளியிட்ட அறிக்கையில் என்ன இருக்கிறதோ அதன்படி தான் நடக்க முடியும்” என்று தெரிவித்தார். இதனால், பிரேமலதா, எடப்பாடி மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார். இதனால், வர உள்ள தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா? என்பது கேள்வி குறியாகி உள்ளது. இந்த விவகாரம் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

அவருக்கு கட்சியின் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை வழங்க வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் பிரேமலதா, தேமுதிக செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி அனைத்து மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களை அழைத்துப் பேசி விஜய பிரபாகரனுக்கு உரிய பதவி வழங்கப்படும் என்று முன்னர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தற்போதுதான் தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. எனவே, இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரும் 30ம் தேதி நடைபெற உள்ள தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

The post பிரேமலதா தலைமையில் வரும் 30ம் தேதி தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது: விஜய பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்க திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article