பிரியங்கா காந்திக்கு '1984' கைப்பையை பரிசளித்த பா.ஜ.க. எம்.பி.

6 hours ago 2

புதுடெல்லி,

வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்றத்திற்கு வந்தபோது, போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 'பாலஸ்தீனம்' என்ற பெயர் பொறிக்கப்பட்ட கைப்பையை கொண்டு வந்தார். அந்த பையில் தர்பூசணி உள்ளிட்ட பாலஸ்தீன சின்னங்களும், அமைதியை குறிக்கும் வெள்ளைப் புறாவின் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தொடர்ந்து செவ்வாக்கிழமை நாடாளுமன்றத்திற்கு வரும்போது பிரியங்கா காந்தி கொண்டு வந்த கைப்பையில், வங்காளதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், "வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக துணை நிற்போம்" என்று எழுதப்பட்டிருந்தது. பிரியங்கா காந்தியின் செயலுக்கு ஒருபுறம் ஆதரவு கிடைத்தாலும், மற்றொரு தரப்பினர் இதனை விமர்சித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க. எம்.பி. அபராஜிதா சாரங்கி, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரியங்கா காந்திக்கு ஒரு கைப்பையை பரிசளித்தார். அந்த கைப்பையில் 1984-ம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை நினைவுப்படுத்தும் வகையில் '1984 கலவரம்' என்று எழுதப்பட்டிருந்தது. அந்த பையை பிரியங்கா காந்தி பெற்றுக்கொண்டார். இது குறித்து அபராஜிதா சாரங்கி கூறுகையில், "பிரியங்கா காந்தி தனது கைப்பை மூலம் சில செய்திகளை சொல்கிறார். அந்த வகையில் இதுவும் அவர் சொல்ல வேண்டிய முக்கியமான செய்தியாகும்" என்று தெரிவித்தார்.

Read Entire Article