மாஸ்கோ,
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கலாசார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரத்தில் நடைபெற்றது.
'உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா். சா்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் தலைவர்கள் கலந்துரையாடினர்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தனி விமானத்தில் ரஷியா சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் மந்திரிகளும், உயர் அதிகாரிகளும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பிரிக்ஸ் மாநாட்டுக்கு வருகை தந்த பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இதில் முக்கியமாக பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இது 5 ஆண்டுகளுக்கு பிறகு இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற முறையான இருதரப்பு பேச்சுவார்த்தை ஆகும். எனவே, இந்த பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக இன்று நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, "பிரிக்ஸ் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் உரையாடல்களை ஆதரிக்கிறது, போரை அல்ல. பிரிக்ஸ் என்பது பிரிவினைக்கான குழு அல்ல, இது பொதுநலனுக்கான அமைப்பு. சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான விவகாரங்களில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று தெரிவித்தார். மாநாடு நிறைவு பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.