மாஸ்கோ,
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கலாசார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரத்தில் நடைபெறுகிறது.
இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், 'உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்' ஆகும். மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றுள்ளனா். சா்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் தலைவர்கள் கலந்துரையாடுகின்றனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் ரஷியா சென்றடைந்தார். அந்நாட்டின் மந்திரிகளும், உயர் அதிகாரிகளும் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பிரிக்ஸ் மாநாட்டுக்கு வருகை தந்த பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இந்நிலையில், 16-வது பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது;-
"பிரிக்ஸ் கூட்டமைப்பு, பேச்சுவார்த்தைகள் மற்றும் உரையாடல்களை ஆதரிக்கிறது, போரை அல்ல. கொரோனா தொற்று போன்ற ஒரு சவாலை நம்மால் ஒன்றாக சமாளிக்க முடிந்ததைப் போலவே, எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான, வலுவான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான புதிய வாய்ப்புகளை நம்மால் நிச்சயமாக உருவாக்க முடியும்.
பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினைகளில் இரட்டை நிலைப்பாட்டுக்கு இடமில்லை. பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கான நிதியுதவியை எதிர்க்க அனைவரின் ஆதரவும் தேவை. நமது நாடுகளில் இளைஞர்கள் பயங்கரவாதிகளாக மாற்றப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான விவகாரங்களில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பிரிக்ஸ் என்பது பிரிவினைக்கான குழு அல்ல, இது பொதுநலனுக்கான அமைப்பு. போர்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பருவநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதம் போன்ற பல சவால்கள் நிறைந்துள்ள இந்த காலகட்டத்தில் நாம் ஒன்றாக சந்திக்கிறோம். பணவீக்கம், உணவு பாதுகாப்பு, ஆற்றல் பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்டவை அனைத்து நாடுகளும் முன்னுரிமை அளித்து கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் ஆகும்.
அதே போல், இணைய பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான சர்வதேச விதிமுறைகளை நாம் வகுக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சிகான இந்த காலகட்டத்தில், சைபர் குற்றங்கள், தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட புதிய சவால்கள் உருவாகியுள்ளன.
இந்த நேரத்தில், பிரிக்ஸ் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான தளமாக பிரிக்ஸ் விளங்கும் என்று நான் நம்புகிறேன். பிரிக்ஸ் கூட்டமைப்பில் புதிய கூட்டாளி நாடுகளை வரவேற்க இந்தியா தயாராக உள்ளது.
பிரிக்ஸ் அமைப்பை நிறுவிய உறுப்பினர்களின் கருத்துகள் மதிக்கப்பட வேண்டும். ஜோகனஸ்பர்க் உச்சிமாநாட்டின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்கள், கோட்பாடுகள், தரநிலைகள், அளவுகோல்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவை அனைத்து உறுப்பினர்களாலும், கூட்டாளி நாடுகளாலும் பின்பற்றப்பட வேண்டும்.
தெற்கு நாடுகளின் நம்பிக்கைகள், நலன்கள் மற்றும் எதிர்பார்ப்புகளையும் மனதில் கொள்ள வேண்டும். ஜி20 மாநாட்டின்போது, தெற்கு நாடுகளின் குரல்களை இந்தியா உலக அரங்கத்தின் முன் ஒலிக்க வைத்தது. பிரிக்ஸ் அமைப்பிலும் இந்த முயற்சிகளை மேற்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆண்டு ஆப்பிரிக்க நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் இணைக்கப்பட்டன.
இந்த ஆண்டு பல்வேறு தெற்கு நாடுகளை பிரிக்ஸ் மாநாட்டிற்கு ரஷியா அழைத்துள்ளது. பன்முகத்தன்மை, மரியாதை மற்றும் ஒருமித்த கருத்துடன் முன்னேறிச் செல்லுதல் ஆகியவை பிரிக்ஸ் அமைப்பின் அடிப்படையாகும். நமது இந்த பண்புதான் பல்வேறு நாடுகளை கவர்கிறது. பிரிக்ஸ் அமைப்பை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவராக இந்தியா தனது கடமைகளை எப்போதும் நிறைவேற்றும்."
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.