பிரம்மோற்சவத்தின் 6ம் நாளில் அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி: திருப்பதியில் இன்று மாலை தங்க தேரோட்டம்

3 months ago 19

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி அனுமந்த வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலை தங்க ேதரோட்டம் நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவில் மலையப்பசுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான நேற்று மாலை முக்கிய வாகன சேவையான கருட சேவை உற்சவம் நடந்தது. இதில் மலையப்ப சுவாமி தங்க, வைர, பச்சை மரகதம் கற்கள் பதிக்கிப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாடவீதியில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கருட சேவையில் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.

பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான இன்று காலை ரங்கநாதர் மண்டபத்தில் மலையப்பசுவாமி அனுமந்த வாகனத்தில் ராமர் அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அனுமந்த வாகனத்தில் 4 மாட வீதியில் பவனி வந்த மலையப்பசுவாமியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். த்ரேதா யுகத்தில் தனக்கு சேவை செய்த பக்தன் அனுமந்தனின் பக்தியை, பக்தர்களுக்கு உணர்த்தும் விதமாக மலையப்பசுவாமி அனுமந்த வாகனத்தில் வீதியுலா வருவதாக ஐதீகம்.

வீதி உலாவின் போது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, அரியானா, அசாம், கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் சுவாமியின் பல்வேறு அவதாரங்களில் வேடம் அணிந்து பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை 4 மணியளவில் தேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்பசுவாமி 32 அடி உயரமுள்ள தங்க ரதத்தில் வீதியுலா நடைபெற உள்ளது. தங்க ரதத்தை பெண் பக்தர்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வருவார்கள் என்பது சிறப்பு வாய்ந்தது. இரவு உற்சவத்தில் கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருள்கிறார். கஜேந்திர மோட்சத்தில் யானையை காப்பாற்றி மோட்சம் அளித்ததுபோல், தன்னை சரணடையும் பக்தர்களை சீனிவாச பெருமாள் காப்பற்றுவார் என்பதை விளக்கும் வகையில் இந்த உற்சவம் நடைபெறுகிறது. இந்த வாகன சேவையில் மலையப்பசுவாமியை தரிசனம் செய்வதால் யானை அளவுள்ள பிரச்னைகளும் எறும்பு போல் மாறி தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

The post பிரம்மோற்சவத்தின் 6ம் நாளில் அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி: திருப்பதியில் இன்று மாலை தங்க தேரோட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article