பிரம்மோற்சவ விழா: குதிரை வாகனத்தில் மகாராணியாக எழுந்தருளிய பத்மாவதி தாயார்

6 months ago 21

திருச்சானூர்:

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் காலையிலும் இரவிலும் தாயார் வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சின்ன சேஷ வாகனம், பெரிய சேஷ வாகனம், ஹம்ச வாகனம், முத்தையாபு பாண்டிரி வாகனம் மற்றும் சிம்ம வாகன சேவை, கல்ப விருட்ச வாகன சேவை, ஹனுமந்த வாகன சேவை, சர்வ பூபால வாகனம், கருட வாகனம், சூரிய பிரபை வாகனம், சந்திர பிரபை வாகன சேவையைத் தொடர்ந்து வாகன சேவையின் இறுதி நாளான நேற்று இரவு அஸ்வ வாகன சேவை நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட அஸ்வ வாகனத்தில் (குதிரை வாகனம்) மகாராணியாக எழுந்தருளிய பத்மாவதி தாயார், மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாகன சேவைக்கு முன்னால் பல்வேறு நடன கலைஞர்கள், சிறுவர்-சிறுமிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

திருமலையின் பெரிய ஜீயர், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு, செயல் அதிகாரி சியாமளா ராவ், இணை செயல் அதிகாரி வீரபிரம்மம், துணை செயல் அதிகாரி கோவிந்தராஜன் மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான பஞ்சமி தீர்த்தம் இன்று மதியம் நடைபெற்றது. 

Read Entire Article