பிரபல மலையாள எழுத்தாளரும், இயக்குநருமான எம்.டி. வாசுதேவன் நாயர் மரணம்: முதல்வர் பினராயி விஜயன் நேரில் அஞ்சலி

3 weeks ago 4

திருவனந்தபுரம்: மலையாளத்தில் மிகவும் பிரபலமான எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எம்.டி. வாசுதேவன் நாயர் (91). சிறுகதையில் தொடங்கி நாவல், நாடகம், குழந்தைகள் இலக்கியம், பயணக் கட்டுரைகள் மற்றும் சினிமா திரைக்கதை என எழுத்துலகில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார்.

1965ல் முறைப்பெண் என்ற மலையாளப் படத்திற்கு எம்.டி. வாசுதேவன் நாயர் முதன் முதலாக திரைக்கதை எழுதினார். பஞ்சாக்னி,அமிர்தம் கமயா, வைஷாலி, ஒரு வடக்கன் வீரகாதா, பெருந்தச்சன் உள்பட 50க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கு இவர் திரைக்கதை எழுதியுள்ளார்.நிர்மால்யம் உள்பட 6 படங்களை இயக்கியுள்ளார். முதன் முதலில் இயக்கிய நிர்மால்யம் படத்திற்கு இவருக்கு ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் கிடைத்தது.

2005ல் இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. ஞானபீடம், மத்திய சாகித்ய அகாடமி, கேரள சாகித்திய அகாடமி, வயலார் விருது உள்பட ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த திரைக்கதைக்கு ஒன்றிய அரசின் 4 விருதுகளும், கேரள அரசின் 3 விருதுகளும் கிடைத்துள்ளன. இது தவிர சிறந்த திரைக்கதைக்கு கேரள அரசின் 11 விருதுகளும் கிடைத்துள்ளன.

இந்நிலையில் சளித்தொல்லை, மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 16ம் தேதி எம்.டி. வாசுதேவன் நாயர் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு அவர் காலமானார்.

எம்.டி. வாசுதேவன் நாயரின் மறைவுக்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் பினராயி விஜயன் நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி மற்றும் பலர் எம்.டி. வாசுதேவன் நாயரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை கோழிக்கோடு மாவூரில் உள்ள பொது மயானத்தில் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. எம்.டி. வாசுதேவன் நாயரின் மறைவையொட்டி கேரள அரசு சார்பில் நேற்றும், இன்றும் 2 நாள் அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

The post பிரபல மலையாள எழுத்தாளரும், இயக்குநருமான எம்.டி. வாசுதேவன் நாயர் மரணம்: முதல்வர் பினராயி விஜயன் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Read Entire Article