
சென்னை,
கன்னட படத்தின் மூலம் 2006-ல் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு, என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளார். தமிழில் அவர் நடிப்பில் வெளியான, 'காஞ்சனா - 2', 'ஒகே கண்மணி', 'மெர்சல்', 'திருச்சிற்றம்பலம்' ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.
அவர் நடிப்பில் உருவான 'குமாரி ஸ்ரீமதி', 'மாஸ்டர்பீஸ்' ஆகிய இணைய தொடர்களும் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில், இவருக்கு 'திருச்சிற்றம்பலம்' படத்திற்காக நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நித்யா மேனன், தமிழ், மலையாளம், தெலுங்கு மட்டுமில்லாமல் இந்தியிலும் நடித்துள்ளார். அதன்படி, கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'மிஷன் மங்கள்' படத்தின் மூலம் இவர் இந்தியில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டே 'பிரீத்: இன் டு தி ஷாடோஸ்' என்ற இந்தி வெப் தொடரில் நடித்திருந்தார். இதன் பின்பு அவர் இதுவரை இந்தியில் நடிக்கவில்லை.
இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனர் விக்ரமாதித்ய மோத்வானே உடன் பணியாற்ற விரும்புவதாக நித்யா மேனன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், '
'எனக்கு இந்தியில் எனக்கு மிகவும் பிடித்த படம் 'லூட்டேரா'. அப்படத்தின் இயக்குனர் விக்ரமாதித்ய மோத்வானே உடன் பணியாற்ற விரும்புகிறேன். அவர் என் மனதில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார். இந்தியில் எத்தனையோ அற்புதமான இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் இப்போது இந்தியில் செய்திருப்பது பனிப்பாறையின் நுனி மட்டுமே என உணர்கிறேன். என்னால் இன்னும் நிறைய செய்ய முடியும், அது நடக்கும் என்று நான் நம்புகிறேன்' என்றார்.