
சென்னை,
தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு, கதாநாயகனாக நடித்து 'லவ் டுடே' படத்தை இயக்கினார். இப்படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்ஐகே) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படத்தில் நடித்தார். கடந்த மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படம் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ள இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு திரைப்பட பிரபலம் மமிதா பைஜு நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மேலும் இரண்டு கதாநாயகிகள் அவருடன் இணைந்து நடிக்க உள்ளனர். அதாவது, அனு இமானுவேல் மற்றும் சீரியல் நடிகை ஐஸ்வர்யா ஷர்மா நடிக்க உள்ளதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
