காஞ்சிபுரம், அக்.19: செங்கல்பட்டு மாவட்டம், மல்ரோசாபுரம், சின்ன செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் ஜான். இவர், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது, கதர் கிராம தொழில்கள் காஞ்சிபுரம் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடன் பெற கடந்த 2008ம் ஆண்டில் விண்ணப்பித்திருந்தார். இந்த, விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த சர்க்கரை என்பவரை, 29.12.2008 அன்று அணுகியபோது 1000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
அதற்கு, உடன்படாத ஜான் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் 7.1.2009 அன்று புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில், லஞ்சம் வாங்கும்போது சர்க்கரை கையும் களவுமாக கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் புலனாய்வு முடிக்கப்பட்டு குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. தொடர்ந்து விசாரணை முடிவடைந்து நேற்று தனி நீதிபதி வசந்தகுமார் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி சர்க்கரையை குற்றவாளி என கூறி ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 7ன் கீழ் ஓராண்டு சிறை தண்டனை, பிரிவு 13ன் கீழ் ஓராண்டு சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
The post பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன் பெற லஞ்சம் வாங்கிய ஊழியருக்கு 2 ஆண்டு சிறை: காஞ்சி நீதிமன்றத்தில் தீர்ப்பு appeared first on Dinakaran.