புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்திற்கு மத்தியில் விமானப்படை தளபதி ஏ.பி.சிங் நேற்று திடீரென பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை இந்தியா தீவிரமாக தேடி வருகிறது. தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் மீதும், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். தீவிரவாதிகள் கனவிலும் கற்பனை செய்ய முடியாத தண்டனை வழங்குவதாக மோடி சபதம் செய்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தீவிரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளதுடன், அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டு பாகிஸ்தானுடனான வர்த்தக உறவு முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கொடியேந்திய எந்த கப்பலும் இந்திய துறைமுகங்களில் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது. உலகளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தவும் இந்தியா முயற்சிகள் எடுத்து வருகிறது. இதுமட்டுமின்றி, பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகள் எடுக்கவும் இந்தியா தயாராகி வருகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், பாகிஸ்தானுக்கு எதிராக எந்த மாதிரியான நடவடிக்கையை எப்போது, எங்கு எடுப்பது என்பது குறித்து தீர்மானிக்க ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் முப்படைகளும் போருக்கு தயாராகி வருகின்றன.
எல்லையில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்திய போர் விமானங்கள் தயார்நிலையை உறுதிப்படுத்த போர் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. அரபிக்கடலில் இந்திய போர் கப்பல்கள் எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளன. அதே போல, பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு பதில் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, போரை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் இரு நாடுகள் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்த மோதலை மேலும் விரிவுபடுத்த வேண்டாம் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இருதரப்பிலும் சமரசம் பேசி வருகின்றன.
இந்த சூழலில், விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஏ.பி.சிங் டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அப்போது, எல்லையில் இந்திய போர் விமானங்களின் தயார் நிலை குறித்தும் எல்லை நிலவரம் குறித்தும் அவர் பிரதமர் மோடியிடம் விளக்கியதாக கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் உள்ள கங்கா விரைவுச் சாலையில் ரபேல், சுகோய் உள்ளிட்ட போர் விமானங்கள் தரை இறக்கி, பறக்க வைக்கும் ஒத்திகையை விமானப்படை மேற்கொண்டது.
அவசரகாலங்களில் இச்சாலையை விமானத்தளமாக பயன்படுத்த 3.5 கிமீ தூரத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் இந்த ஒத்திகை நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து விமானப்படை தளபதி ஏ.பி.சிங், பிரதமர் மோடியை சந்தித்து பேசி உள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி பிரதமர் மோடியை சந்தித்து பேசியிருந்தார்.
அப்போது அரபிக்கடலில் இந்திய போர்கப்பல்களின் தயார் நிலை குறித்தும், பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி தொடர்பாகவும் அவர் பிரதமர் மோடியிடம் விளக்கியதாக கூறப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில், விமானப்படை தளபதியும், கடற்படை தளபதியும் அடுத்தடுத்து பிரதமர் மோடியை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* போர் வந்தால் ஓடிவிடுவேன்: பாக். எம்பி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த லக்கி மார்வத் தொகுதி எம்பி ஷேர் அப்சல் கானிடம் செய்தியாளர் ஒருவர், ‘‘இந்தியாவுடன் போர் ஏற்பட்டால், துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சண்டைக்கு செல்வீர்களா?’’ என கேட்டதற்கு, ‘‘போர் வந்தால் நான் இங்கிலாந்துக்கு ஓடிவிடுவேன்’’ என கூறி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
* இந்திய கப்பல்களுக்கு பாகிஸ்தான் தடை
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள், பாகிஸ்தான் கப்பல்களுக்கு இந்தியா தடை விதித்ததையடுத்து, இந்திய கப்பல்கள் அந்நாட்டு துறைமுகங்களில் நுழைய பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. கடந்த மாதம் நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் பலியானார்கள். இந்த கொடூர தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து நேரடியாக அல்லது மறைமுகமாக அனைத்துவித இறக்குமதிகளுக்கும் இந்தியா உடனடி தடைவிதித்துள்ளது.
அதேபோல் இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் கடல்சார் அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில் தற்போதைய சூழ்நிலையில், இந்திய கொடியுடன் கூடிய கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகங்களில் நுழைவதற்கு அனுமதி இல்லை. கடல் சார் இறையாண்மை, பொருளாதார நலன்கள் மற்றும் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்திய கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
* ராணுவ தளவாட ஆலையில் ஊழியர்களுக்கு விடுப்பு ரத்து
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலையில் அதிகாரிகள், ஊழியர்கள் 2 நாட்களுக்கு மேல் விண்ணப்பித்த விடுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலையில் 4,000 பேர் பணியாற்றுகின்றனர். யாருக்கும் 2 நாளுக்கு மேல் விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆலையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கான எங்களின் இலக்கு அதிகமாக உள்ளது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் செய்து முடிக்க வேண்டிய இலக்குகள் எட்டப்படவில்லை. அந்த தளவாடங்களை உடனடியாக செய்து முடிக்க தலைமை அலுவலகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே விடுப்புகள் ரத்து செய்து, போதுமான ஊழியர்கள் உறுதி செய்யப்படுகின்றனர்’’ என்றார்.
* பதிலடி எனது கடமை
ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பாதுகாப்பு அமைச்சராக, நமது வீரர்களுடன் சேர்ந்து நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும், நமது நாட்டை தாக்கத் துணிபவர்களுக்கு தகுந்த பதிலடி தருவதும் எனது கடமை. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், என்ன செய்ய வேண்டுமென மக்கள் விரும்புகிறார்களோ அது நிச்சயம் நடக்கும்’’ என்றார்.
The post பிரதமர் மோடியுடன் விமானப்படை தளபதி திடீர் சந்திப்பு: பஹல்காம் தீவிரவாத சம்பவத்துக்கு பதிலடி கொடுப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை appeared first on Dinakaran.