மும்பை : மராட்டியத்தில் பாஜக அமைத்திருக்கும் மகா யுதி கூட்டணி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது காணாமல் போய்விடும் என்று உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவாத் தெரிவித்துள்ளார். மராட்டிய சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மகா விகாஷ் அகாதி கூட்டணி கட்சிகள் மீது பிரதமர் மோடி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், பிரதமர் மோடி பேசும் வார்த்தைகளை மராட்டிய மக்கள் நம்பமாட்டார்கள் என்று தெரிவித்தார். மேலும், “தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுவதை மராட்டிய மக்கள் நம்ப மாட்டார்கள். மகா விகாஷ் அகாதி கூட்டணி ஒற்றுமையாக உள்ளது.இந்தக் கூட்டணி மராட்டியத்தை பாதுகாக்கும். யாருடைய ரிமோட் கன்ட்ரோல் யார் கையில் இருக்கிறது என மக்களுக்கு தெரியும்.
சிவசேனாவை உடைத்து அதன் ரிமோட் கன்ட்ரோலை கையில் வைத்துக் கொண்டார்கள்.நவம்பர் 23ம் தேதிக்கு பிறகு மகா யுதி கூட்டணியே இருக்காது,” என்றார். இதனிடையே ஊடுருவல்காரர்கள் பற்றியே பேசும் மோடி, பெண்களின் பாதுகாப்பது பற்றி பேசுவாரா? என ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ஹரி பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.
The post பிரதமர் மோடியின் பேச்சுகளை மகாராஷ்டிரா மக்கள் நம்பமாட்டார்கள் : சஞ்சய் ராவத் பேட்டி appeared first on Dinakaran.