சண்டிகர்: அரியானா பேரவை தேர்தலையொட்டி, அம்பாலா, நாராயண்கார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,‘‘ காங்கிரஸ் மற்றும் பாஜ கட்சிகளுக்கு இடையே கொள்கை ரீதியான மோதல் நடக்கிறது. ஒரு புறம் நீதி, இன்னொருபுறம் அநீதி. மோடி தலைமையிலான பாஜ அரசு தொழிலதிபர்களுக்காக வேலை பார்க்கிறது. சாமானியர்கள் வாழ்வதற்கே போராடும் போது அதானியின் வங்கி கணக்கில் சுனாமி போல் பணம் கொட்டி வருகிறது. சாமானிய மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் புயல் போல் வெளியேறுகிறது.
அரசின் பாதுகாப்பு பட்ஜெட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் அதானிக்கு செல்கிறது. பதிலுக்கு மோடியும், பாஜவும் அதானியிடம் இருந்து முழு ஆதரவைப் பெறுகின்றன. அதானி தனது நண்பர் மோடியின் முகத்தை 24 மணி நேரமும் பல செய்தி சேனல்களில் காட்டுகிறார். பிரதமர் மோடியின் கடவுள் அதானி. அதானி என்ன சொன்னாலும் மோடி செய்கிறார். மும்பை விமான நிலையம் வேண்டும், இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் வணிகம் வேண்டும், காஷ்மீரில் ஆப்பிள் – வால்நட் வணிகம் தேவை, விவசாயிகளின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தேவை என அதானி எதையெல்லாம் கேட்டாரோ அவை அனைத்தையும் அவருக்கு மோடி தருகிறார்’’ என்றார்.
* சக்கரவியூகத்தில் இருக்கும் 6 பேர்
அரியானா மாநிலம் குருக்ஷேத்திரம் தானேசரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மகாபார போரில் நடந்த சக்கர வியூகம் பற்றி ராகுல் குறிப்பிட்டு பேசினார். அவர் கூறுகையில்,’ ஏழைகளின் பணம் ஒரு சில பணக்காரர்கள் வசம் செல்ல வசதியாக மகாபாரதத்தில் உள்ள ‘சக்கரவியூகம்’ போன்றே தற்போது ‘சக்கரவியூகம்’ உருவாக்கப்பட்டு, அதற்குப் பின்னால் பிரதமர் மோடி, அமித்ஷா, அதானி, அம்பானி, தோவல், மோகன் பகவத் ஆகியோர் இருக்கிறார்கள். இந்த நாட்டின் ஏழை மக்களின் பணம் 20 முதல் 25 பில்லியனர்களின் கைகளுக்குச் செல்ல வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஒரு சில கோடீஸ்வரர்கள் மகிழ்ச்சியாக வாழவும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பசியுடன் இருக்கும் இந்தியா எங்களுக்கு வேண்டாம். இந்த நிலை தொடர விட மாட்டோம், இதை மாற்ற, இந்த அமித் ஷா-மோடியின் சக்கரவியூகத்தை உடைக்க வேண்டும். நான் மோடியிடம் இந்தியாவின் இளைஞர்கள் அபிமன்யு அல்ல, அவர்கள் அர்ஜுனன்கள். அவர்கள் உங்கள் சக்கரவியூகத்தை இரண்டே நிமிடங்களில் உடைத்துவிடுவார்கள் என்று சொன்னேன்’ என்றார்.
The post பிரதமர் மோடியின் கடவுள் அதானி: அரியானா பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி தாக்கு appeared first on Dinakaran.