
பாங்காக்,
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒன்றிணைந்து, பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு தாய்லாந்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தாய்லாந்து செல்கிறார்.அங்கு அவருக்கு இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு அளிக்கிறார்கள். இதன்பிறகு தாய்லாந்து அரசு இல்லத்தில் அந்த நாட்டு பிரதமர் ஷினவத்ராவை சந்திக்கிறார். அங்கு அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மாலையில் கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை மேற்பார்வையிட தாய்லாந்து, வங்காள விரிகுடா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிம்ஸ்டெக் தலைவர்களுடன் பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார். நாளை நடைபெறும் உச்சி மாநாட்டில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, வங்காளதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இதையடுத்து தாய்லாந்து மன்னர் மகா விஜிரலோங்கோர்ன், ராணி சுதிடா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். மேலும் பிரதமர் மோடியும், தாய்லாந்து பிரதமர் ஷினாவத்ராவும் தாய்லாந்தின் சிறந்த 6 கோவில்களில் ஒன்றான வாட்போவை பார்வையிடுகிறார்கள்.