பிரதமர் பேசினால்தான் பிரச்சினை தீரும்

1 day ago 1

தமிழகத்தில் 1,076 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடற்கரை இருக்கிறது. இந்த கடலோரங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்கள், குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு மீன்பிடி தொழில்தான் வாழ்வாதாரம். ஆர்ப்பரிக்கும் கடலில், கொந்தளிக்கும் அலையின் நடுவே மழையென்றாலும் சரி, புயல் என்றாலும் சரி, கடுங்குளிர் என்றாலும் சரி, கொளுத்தும் வெயில் என்றாலும் சரி, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மீன் பிடிக்க சென்றால்தான் அவர்கள் வீட்டு அடுப்பில் உலை கொதிக்கும்.

2009-ம் ஆண்டு வரையில் இயற்கையை நினைத்து மட்டுமே பயந்து கொண்டு இருந்தவர்கள், அதற்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்களால் இலங்கை கடற்படையினர் எப்போது வருவார்களோ, நம்மை தாக்கிவிடுவார்களோ, வலையை அறுத்து விடுவார்களோ, கைது செய்துகொண்டு போய் இலங்கை சிறையில் அடைத்து விடுவார்களோ, நமது படகையும், மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்து கொண்டு போய்விடுவார்களோ என்ற பயத்தில் இருக்க வேண்டிய நிலை இருக்கிறது.

எப்போதும் இலங்கை கடற்படையை நினைத்து பயந்து கொண்டே இருப்பதால், அவர்களின் கவனம் மீன் பிடிப்பதில் இருப்பதில்லை. இலங்கை கடற்படையினர் வருகிறார்களோ என்ற அச்சத்தில் அவர்கள் பார்வை சுற்றி, சுற்றி சுழன்று கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அவர்கள் பிடிபடும் போதெல்லாம் தமிழக அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பதும், மத்திய அரசாங்கம் தூதரக உறவு மூலம் அவர்களை விடுவிப்பதும் வாடிக்கையாக போய்விட்டது. ஆனால் மீனவர்களை விடுதலை செய்யும் இலங்கை அரசாங்கம் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிப்பதில்லை. இதனால் மீண்டும் தொழில் செய்ய படகுகள் இல்லாமல் அவர்கள் நிராயுதபாணிகளாகத்தான் திரும்பவேண்டிய நிலை இருக்கிறது.

அவர்களுக்கு வேறு தொழில் தெரியாததால் மீண்டும் படகில் ஏறி மீன்பிடிக்கத்தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இப்போது முன்பு இருந்த நிலை இல்லை. கடலில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் உடனே அங்குள்ள கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, அவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்டினால்தான் விடுதலை என்ற நிலை உருவாகிவிட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழகத்தில் இருந்து 5 பேர் கொண்ட மீனவர் குழு இலங்கைக்கு சென்று, இலங்கை மீனவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் நேரத்தில் ராமேசுவரத்தில் இருந்து கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துவிட்டது.

அவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், கடந்த 3 மாதங்களில் மட்டும் 11 வெவ்வேறு சம்பவங்களில் 147 மீனவர்கள் மற்றும் 19 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பிரச்சினை தொடர்கதையாகிவிட்டது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்பட்டேயாகவேண்டும். அது 5-ந்தேதி இலங்கைக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகேவிடம் பேசினால் மட்டுமே முடியும் என்று தமிழக மீனவர்கள் கருதுகிறார்கள். அன்றே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டாலும் ஒரு நல்ல முயற்சியை தொடங்கி விட்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Read Entire Article