பிரசாதம் மற்றும் உணவுகளுக்கு 523 கோயில்களுக்கு ஒன்றிய அரசு சான்றிதழ்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

3 months ago 27

சென்னை: தமிழகத்தில் கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் உணவுகளில் ஒன்றிய அரசால் தரப்படும் சான்றிதழ் 523 கோவில்களுக்கு தரப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்திட 100 கிலோ வெள்ளிக் கட்டிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கி, வெள்ளித்தகடு வேயும் பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த வெள்ளித் தேர் ராஜிவ் காந்தி மரணத்தின் பொழுது கலவரக்காரர்களால் தீக்கரை ஆக்கப்பட்டது. அதை தொடர்ந்து வெள்ளித்தேரை புனரமைக்கும் பணி சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு இந்து சமய அறநிலைத்துறைக்கு கவனத்திற்கு கொண்டு வந்தவுடன் முதலமைச்சர் வெள்ளித்தேரை உருவாக்கும் பணியை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார். அந்த வகையில் முதற்கட்டமாக கள ஆய்வு செய்து அந்த வெள்ளி தேரை முதற்கட்டமாக மரத் தேராக உருவாகும் பணி நிறைவுற்று இருக்கிறது. இந்த வெள்ளித்தேருக்கு சுமார் 450 கிலோ வெள்ளி தேவைப்படுகிறது. திருக்கோவில் சார்பில் ஒன்பது கிலோ நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த வெள்ளித்தேரை உருவாக்குவதற்கு 100 கிலோ வெள்ளிக்கட்டிகளை திருப்பணிகளுக்காக நன்கொடைகளாக வழங்கி உள்ளனர். இதனுடைய மதிப்பு 1 கோடி 2 லட்சம் ஆகும். மீதமுள்ள 300 கிலோ அளவில் உள்ள வெள்ளிக்கட்டியை நன்கொடையாக பெறவுள்ளோம். ஆண்டுக் கணக்கில் முடங்கியிருந்த திருத்ததேர்களை பக்தர்களுக்கு கொண்டு வந்த ஆட்சி இந்த ஆட்சி எனவும் ராமேஸ்வரம் கோவிலில் 12 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தங்கத் தேரை ஓட வைத்த பெருமை இந்த ஆட்சியை சேரும். 150 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் தேரினை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து இருக்கிறோம்.  68 தங்க தேர், 55 வெளித் தேர் பயன்பாட்டில் உள்ளது, ஐந்து தங்க தேர்களும், 9 வெள்ளிதேர்களும் புதிதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பெரியபாளையம் திருக்கோவிலில் தங்கத்தேர் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீதமுள்ள தேர்களுக்கு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 1000 கோடி ரூபாய் மேல் நன்கொடையாளர்கள் வந்துள்ள சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக இந்து சமய அறநிலை துறை சார்பில் 5,433 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படப்பட்டு வருகிறது. இதுவரை மாநில வல்லுநர் குழுவால் 10,172 கோவில்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரம் திருக்கோவில்களுக்கு கூட அதிமுக ஆட்சியில் ஒப்புதல் பெற்றிருக்க மாட்டார்கள். இந்த ஆட்சியில் 59 கோடி மதிப்பில் 97 மரத்தேர் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்வர் ஆட்சியில் தான் திருக்குளங்கள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருக்கோவில் குளங்கள் சீரமைக்கும் பணிகளுக்கு 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 220 திருக்குளங்கள் செப்பினிடம் பணிகள் நடைபெற்று வருகிறது. 86 கோடி ரூபாய் செலவில் 121 அன்னதான கூடங்கள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 2025 கோவில்களில் திருப்பணிகள் நடந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 2500 கோவில்களில் திருப்பணிகள் நடத்த பணிகள் நடைபெற்று வருகிறது. எதை செய்தாலும் எதிர்ப்பதுதான் பாஜகவின் வாடிக்கை, ஏதாவது ஒரு வகையில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும், மக்களிடம் உள்ள நன்மதிப்பை குறைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்பட கூடியவர்கள் பாஜகவினர்.

கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் உணவுகளில் ஒன்றிய அரசால் தரப்படும் சான்றிதழ் 523 கோவில்களுக்கு தரப்பட்டுள்ளது. பழனி பஞ்சாமிர்தம் குறித்து தவறான சூழலை உருவாக்கியவர் மீது திருக்கோவில் சார்பில் புகார் அளிக்கப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 763 கோயில்களில் 1 வேலை அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 92 ஆயிரம் பேர் அன்னதானம் திட்டத்தால் பயனடைகிறார்கள். இந்த ஆண்டுக்கு அன்னதானம் திட்டத்திற்கு 110 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பிரசாதம் மற்றும் உணவுகளுக்கு 523 கோயில்களுக்கு ஒன்றிய அரசு சான்றிதழ்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article