பிரகலாதனின் தாயார் கோயில்

6 hours ago 2

பிரகலாதனின் தாயார் கோயில்

திருநெல்வேலி பாவூர் சத்திரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள கீழப்பாவூர் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் பதினாறு கரங்களுடன் அருளும் உக்ர நரசிம்மரை சாந்தப்படுத்தும் விதத்தில் சூரிய, சந்திரர்கள் வெண் சாமரம் வீசுகிறார்கள். இந்த நரஹரிைய நாரதர். பிரகலாதன், பிரகலாதனின் தாயார் கயாது ஆகியோர் வணங்கியபடி காட்சி தருவது அபூர்வமானதாகக் கருதப்படுகிறது. திருமகள் தினமும் இத்தல திருக்குளத்தில் நீராடி நரசிம்ம மூர்த்தியை தாமரை மலர்களால் அர்ச்சிப்பதாக ஐதீகம்.

தீய கனவொழிக்கும் திருவேளுக்கையான்

காஞ்சியில் திருவேளுக்கை எனப்படும் திவ்யதேசத்தில் வேளுக்கை வல்லி சமேத அழகியசிங்கர் திருவருள் புரிகிறார். தீய கனவுகளால் அவதிப்படுவோர், இந்த நரசிம்மரை வணங்கி அர்ச்சித்து வலம் வந்து வழிபட்டு அந்த அவதியிலிருந்து மீள்கின்றனர். தீபப் பிரகாசர் ஆலயத்தின் அருகே இத்தலம் உள்ளது.

நலம் தரும் நரசிம்மர்

சென்னை – பெரும்புதூர் சாலையில் பேரம்பாக்கத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் நரசிங்கபுரம் உள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் விஜயநகரப் பேரரசால் கட்டப்பட்டது. 7 அடி உயரமுள்ள நரசிம்மர் 5 அடி உயர தாயாருடன் அருள்கிறார். நரசிம்மர் வரப் பிரசாதியாகத் திகழ்கிறார். சிறந்த பிரார்த்தனை தலம். தாயாருக்கு மரகதவல்லி என்று பெயர்.

வித்தியாசமான லட்சுமி நரசிம்மர்

வேலூர் – போளூர் பாதையில் 28 கி.மீ. தொலைவில் உள்ளது சிங்ககிரி தலம். இங்கே 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கோயில், 100 படிகள் கொண்ட சிறுகுன்றின் மேல் உள்ளது. 6 அடி உயர நரசிம்ம மூர்த்தி 4 திருக்கரங்களுடன் மகாலட்சுமியை தன் வலது மடியில் அமர்த்தி அற்புத தரிசனம் அருள்கிறார். சாந்த வடிவத்துடன் அருளும் நரசிம்ம மூர்த்தியைக் காணக் கண் கோடி வேண்டும்.

எட்டுக் கரங்களுடன் நரசிம்மர்

சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது பாஷ்யபுரம் எனும் நீர்வளூர். இத்தலத்தில் நரசிம்ம மூர்த்தி ஜ்வாலா நரசிம்மர் எனும் பெயருடன் நின்ற திருக்கோலத்தில் வலது காலைத் தொங்கவிட்டும், இடது காலை மடக்கியும், இரண்யனை வதம் செய்யும் தோற்றத்தில் எட்டுத் திருக்கரங்களுடன் தரிசனமளிக்கிறார். இதே அமைப்பிலுள்ள மூலவரை அகோபிலம் தலத்தில் தரிசிக்கலாம்.

சிரிக்கும் சிங்கமுப் பெருமான்

பொதுவாக நரசிம்மர் உக்கிர வடிவில்தான் தரிசனமளிப்பார். ஆனால், திண்டுக்கல் – கரூர் சாலையில் தாடிக்கொம்பு அருகிலுள்ள மங்களம்புள்ளி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில், நரசிம்மமூர்த்தி சிரித்த முகத்துடன், சாந்த வடிவில், மங்கலவல்லித் தாயார் மற்றும் ஆண்டாளுடன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் மன சஞ்சலங்கள் அகன்று லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சுதர்சனர் பின்னால் வித்தியாச நரசிம்மர்

சென்னை – சேலையூரில் உள்ளது, ஸ்கந்தாஸ்ரமம். சாந்தானந்த சுவாமிகளின் முயற்சியால் எழுந்திருக்கும் ஆலயம் இது. இங்கு பஞ்சலோகத்தில் செய்யப்பட்டுள்ள 18 அடி உயர சுதர்சன மூர்த்தியின் திருவுருவம் உள்ளது. சுதர்சனருக்குப் பின்புறம், பொதுவாக எல்லா தலங்களிலும் யோக நரசிம்மரின் திருவடிவம் இடம் பெற்றிருக்கும். ஆனால், இங்கு தன் மடியில் இருத்திய லட்சுமி, காலடியில் பிரகலாதனோடு நரசிம்மர் காட்சி அளிக்கிறார். இது ஓர் அபூர்வமான அமைப்பு.

ஆண்டு முழுவதும் சந்தனம்

ஆந்திராவில் நரசிம்மருக்கு ஏராளமான கோயில்கள் உள்ளன. சிம்ஹாசலம் கோயிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள். வருடத்தில் ஒருநாள் மட்டும் இந்த நரசிம்மரை சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்

The post பிரகலாதனின் தாயார் கோயில் appeared first on Dinakaran.

Read Entire Article