பிப்ரவரி 28ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையை அமைச்சர்கள் ஆய்வு

1 week ago 5

சென்னை: பிப்ரவரி 28ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் ரூ.109 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை பிப்ரவரி 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை 1986ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை, விபத்து காய சிகிச்சைப் பிரிவு, தொற்றா நோய் பிரிவு, டயாலிசிஸ், ரத்தவங்கி போன்ற சேவைகள் வழங்கும் வகையில், உலக வங்கி திட்டத்தின்கீழ் ரூ.71.81 கோடியில் 3 தளங்களுடன் கூடிய கூடுதல் கட்டிடம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைக்கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக மேலும் பல உயர்சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பிரத்யேக இருதயவியல் சிகிச்சை பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய 6 தளங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டு ரூ.54.82 கோடியில் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி முதல்வரால் ஆணையிடப்பட்டு கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் 28ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிலையில், கட்டுமான பணிகளின் நிலை குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டதோடு அதிகாரிகளிடம் பணிகளின் நிலை தொடர்பாகவும் கேட்டறிந்தனர். அப்போது பணிகளை ஒரு வாரத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும், பொது மக்களுக்கு சிறப்பான முறையில் மருத்துவமனையை கொண்டு வரும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்கள்.

இந்த ஆய்வின்போது அரசு செயலாளர்கள் ஜெயகாந்தன், வினித், தம்புராஜ், செந்தில், மேயர் பிரியா, முதன்மை தலைமை பொறியாளர் மணிவண்ணன், தலைமை பொறியாளர் மணிகண்டன், கண்காணிப்பு பொறியாளர் முத்தமிழரசன், பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களும் உடனிருந்தனர்.

The post பிப்ரவரி 28ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையை அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article