
ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திர நாள், 'மாசி மகம்' என்று கொண்டாடப்படுகிறது. மாசி மகத்தன்று பிரசித்திப் பெற்ற புண்ணிய தலங்களில் உள்ள ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். இவ்வாறு செய்வதால் சகல தோஷங்களும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும் என்பது ஐதீகம். மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மாசி மக விரதத்தை கடைப்பிடித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பித்ரு தோஷ நிவர்த்திக்கு அருமையான பரிகார தினம் மாசி மகம். இதனால், மாசிமகத் தீர்த்தவாரியின்போது நீராடினால் பலவித நன்மைகள் கிடைக்கும்.
மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமக குளத்தில் பிதுர் தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. தேவேந்திரன் மாசி மகத்தன்று துங்கபத்ராவில் நீராடி, சிவ பூஜை செய்து, சாப விமோசனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
ஜாதகத்தில் 5-ம் பாவகமான பூர்வ புண்ணிய ஸ்தானமும், 9-ம் பாவகமான பாக்ய ஸ்தானமும் முக்கியமான இடங்கள். இந்த ஸ்தானங்களில் பாவ கிரகங்கள் இருந்தால், அவர்களுக்குப் பித்ரு தோஷங்கள் இருக்கும். என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்தப் பித்ரு தோஷங்கள் பலவித தடைகளை உருவாக்கும். இவர்கள் மாசி மகத்தன்று பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களில் உள்ள ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராடுவது நல்லது.
ராமேஸ்வரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் பிதுர்க்கடன் செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.