சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியிருந்த சூழ்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்ததை அடுத்து, இப்போட்டிகள் ஒரு வாரம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரபல டி20 கிரிக்கெட் லீக் போட்டியான இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) போட்டியின் 18வது தொடர் மார்ச் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கியது. நடப்பு சாம்பியன் கொல்கத்தா, முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் உட்பட 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி முதல் மு றையாக சென்னை, ஐதராபாத், டெல்லி, கவுகாத்தி, தர்மசாலா, சண்டீகர் உட்பட 13 நகரங்களில் நடந்து வந்தது. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெற வேண்டிய நிலையில் 57 ஆட்டங்கள் முடிந்து போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. களத்தில் உள்ள 10 அணிகளில் சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய ஆட்டங்கள் முதல் 4 இடங்களை பிடித்து அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்ய இருந்தன.
இந்நிலையில், இமாச்சல் பிரதேசம் தர்மசாலாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த, 58வது லீக் போட்டியில் பஞ்சாப்
கிங்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய பஞ்சாப் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றின்றி 122 ரன் குவித்திருந்தது. அரங்கில் 28ஆயிரம் ரசிகர்கள் குவிந்து இருந்தனர். இந்நிலையில் ஆட்டத்தின் 11வது ஓவரை டெல்லி வீரர் நடராஜன் வீச வந்தார். அதன் முதல் பந்தில் பிரியன்ஷ் ஆர்யா ஆட்டமிழந்தார். அப்போது அவர் 70 ரன் எடுத்திருந்தார். பிரப்சிம்ரன் சிங் 50 ரன்னுடன் களத்தில் இருந்தார். அப்போது திடீரென அரங்கில் இருந்த உயர் கோபுர மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. ஆட்டம் 10.1 ஓவரில் நிறுத்தப்பட்டது. களத்தில் இருந்த இரு அணி ஆட்டக்காரர்கள் வெளியேறினர். மேலும் ரசிகர்களை உடனடியாக வெளியேறும்படி அறிவிக்கப்பட்டது. ரசிகர்களும் காரணம் புரியாமல் அணி அணியாக வெளியேறி சென்றனர்.
தொழில்நுட்ப பிரச்னை என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டாலும், எல்லையில் அதிகரித்துள்ள போர் பதற்றம்தான் காரணம் என்பது தெரியவந்தது. கூடவே, தர்மசாலாவில் நாளை நடைபெற இருந்த பஞ்சாப்-மும்பை ஆட்டமும் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எல்லையோர மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள் ஏற்கனவே மூடப்பட்டதால், தர்மசாலாவில் இருந்த டெல்லி, பஞ்சாப் அணி வீரர்கள், வர்ணனையாளர்கள், ஒளிபரப்பாளர்கள் என அனைவரும் பேருந்துகள் மூலம் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டனர். வெளிநாட்டு வீரர்கள் பலரும் போர் பதற்றம் காரணமாக தாய் நாடு திரும்ப விரும்புவதாகவும் தகவல் வெளியாகியது.
எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் எஞ்சிய ஆட்டங்கள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
அதற்கு ஏற்ப 9ம் தேதி, பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகிகள் ஆலோசனைகள் கூட்டம் நடைபெறும் என்று நேற்று முன்தினம் இரவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக் கிடையில் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சில நிர்வாகிகள் காணொளி காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில், ஐபிஎல் போட்டியின் நடப்புத் தொடர் ஒரு வாரம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி நேற்று நடக்க வேண்டிய 59வது லீக் போட்டி, 13 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆப், ஒரு பைனல் என எஞ்சிய எல்லா ஆட்டங்களும் ஏற்கனவே அறிவித்த அட்டவணைப்படி நடக்காது. ஒரு வாரம் கழித்து மீதமுள்ள போட்டிகள் எங்கு, எப்போது நடக்கும் என்பன பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பிசிசிஐ கூட்டத்தில் முடிவு போர் மேகம் சூழ்ந்ததால் ஐபிஎல் ஒரு வாரம் நிறுத்தம்: தேதி, இடம் விரைவில் அறிவிப்பு appeared first on Dinakaran.