
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் உள்ள லாகூரைச் சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி ரோமா மைக்கேல். பி.டெக் பட்டதாரியான இவர், பேஷன் துறையில் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கவனம் ஈர்த்து வருகிறார். மேலும் டெல்லி கேட், கஹே தில் ஜிதர் போன்ற படங்களிலும், பியாரி நிம்மோ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் ரோமா மைக்கேல் நடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த 'சர்வேச மிஸ் கிராண்ட்-2024' அழகிப் போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில் பங்கேற்ற மாடல் அழகிகள், பிகினி உடை அணிந்து மேடையில் 'ரேம்ப் வாக்' செய்து நடந்து வந்தனர். இதன்படி ரோமா மைக்கேலும் பிகினி உடை அணிந்து மேடையில் தோன்றினார். இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.
இதற்கிடையில் ரோமா மைக்கேல் பகிர்ந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணான ரோமா மைக்கேல், பேஷன் என்ற பெயரில் எல்லையை மீறி நடந்து கொள்கிறார் என சிலர் கண்டனம் தெரிவித்தனர். இதன் காரணமாக ரோமா மைக்கேல், அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார்.
இருப்பினும் அவர் பிகினி உடையில் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் ரோமா மைக்கேலுக்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பல்வேறு துறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் உரிமைகள் பற்றிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது.