நெல்லை: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய கல்வி அமைச்சர் புரிதல் இல்லாமல் அனைவருக்கும் கட்டாய கல்வி திட்டத்துடன், தேசிய கல்விக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ திட்டம் ஆகியவற்றை இணைத்து குழப்பி வருகிறார். இவை மூன்றும் தனித்தனியானவை. தேசிய கல்விக் கொள்கையில் 3, 5, 8 வகுப்புகளில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்பது உள்ளது. ஆனால் அந்த வகுப்புகளில் மாணவர்கள் தோல்வியுற்றால் கூலித் தொழில் உள்ளிட்ட பெற்றோர் செய்த தொழிலுக்கே செல்ல வேண்டும். தேசிய கல்விக் கொள்கை மூலம் குலக்கல்வியை ஆதரிக்கின்றனர். இதைத்தான் தமிழகம் எதிர்க்கிறது. இந்த விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
உதாரணமாக பீகார் மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கை திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் 51 சதவீதம் ஆக படித்த மாணவர்களின் எண்ணிக்கை 31 சதவீதமாக குறைந்து விட்டது. அதேபோல் பிஎம் திட்டத்தை இந்தியா முழுவதும் 16 ஆயிரம் பள்ளிகளில் அமல்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகச் சிறந்த பள்ளியை தேர்வு செய்து, அதில் ஒன்றிய அரசின் ஸ்டிக்கரை ஒட்ட முயற்சிக்கின்றனர். தமிழகத்தில் 300 பள்ளிகளை தேர்வு செய்து அதில் பிஎம்ஸ்ரீ பள்ளிகள் என பெயரை சூட்டிக் கொண்டு 60 சதவீத நிதியை ஒன்றிய அரசும், 40 சதவீத நிதியை மாநில அரசும் வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.
அனைவருக்கும் கல்வி திட்ட நிதியை நிறுத்தியது போல், வருங்காலத்தில் பிஎம்ஸ்ரீ நிதியை நிறுத்திவிட்டு அம்பானி, அதானி போன்ற பெரு நிறுவனங்களிடம் தனியார் மயமாக்கும் வகையில் பள்ளிகளை ஒப்படைக்க இந்த திட்டம் வழிவகை செய்யலாம். இத்திட்டத்தின் மூலம் 1 முதல் 5ம் வகுப்பு வரை தமிழ் படித்துக் கொள்ளலாம். ஆனால் 6ம் வகுப்புக்கு பிறகு இந்தி அல்லது சமஸ்கிருதத்தை கட்டாயம் படிக்க வேண்டும். இத்திட்டம் தமிழ் மொழியை அழிக்கும் ஒரு திட்டமாக இருப்பதால் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post பிஎம்ஸ்ரீ திட்டத்தின் மூலம் 16,000 சிறந்த பள்ளிகளில் ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிக்கும் ஒன்றிய அரசு: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.