பி.எப் தொகை ரூ.12 கோடி சுருட்டல் அதிமுக நிர்வாகியிடம் விசாரணை

3 months ago 19

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் முதல் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அதிகாரிகள், தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் குடும்ப சேமநல நிதி (பிஎப்தொகை) கருவூலத்தில் செலுத்தப்பட்டு வரும். இந்நிலையில் சமீபத்தில் தொழிலாளி ஒருவர் தனது பிஎப் பணத்தை எடுக்க சென்றபோது பணம் இல்லாதது குறித்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் கருவூல அதிகாரிகளும் தொழிலாளர்களின் சேமநலநிதி செலுத்தவில்லை என்று தணிக்கை துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த 2021ம் ஆண்டு விழுப்புரம் நகராட்சியில் கணினி ஆபரேட்டர் ஒருவருக்கு உதவியாக அங்கு பணியாற்றும் பெண் ஒருவரின் தத்து மகன் வினித் (அதிமுகவில் இளைஞர், இளம்பெண் பாசறை நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்) என்பவரை உதவிக்கு வைத்திருந்தாராம். அப்போது நகராட்சியிலிருந்து கருவூலத்திற்கு அனுப்பும் வரவு செலவு கணக்கு விவரங்களை அவர் தான் பார்த்தாராம். இதில் அதிகாரிகள், தொழிலாளர்களுக்கு செலுத்தப்படும் பிஎப் பணத்தை கருவூலத்திற்கு செலுத்தாமல் சுருட்டியது தெரியவந்தது.

தற்போது வரை சுமார் ரூ.12 கோடி வரை தொழிலாளர்களின் பிஎப் பணம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இதுகுறித்து நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் நேற்று மாலை வினித்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேடுகளுக்கு நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களும், கருவூல ஊழியர்களும் உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

The post பி.எப் தொகை ரூ.12 கோடி சுருட்டல் அதிமுக நிர்வாகியிடம் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article