
புதுடெல்லி,
பாஸ்டேக்
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில் 'பாஸ்டேக்' என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த நிலையில், உங்கள் பாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்ய மறந்துவிட்டாலோ அல்லது அதனுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளை முறையாகப் பராமரிக்கத் தவறுவதோ, சுங்கச் சாவடிகளில் அபராதங்களை விதிக்க வழிகோலும் வகையில் 17-ந்தேதி முதல் புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளன. அதன் விபரம்;
புதிய விதிகள்
"சுங்கச் சாவடியை அடைவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு பாஸ்டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது ஹாட் லிஸ்டில் இருந்தாலோ அல்லது குறைந்த இருப்பைக் கொண்டிருந்தாலோ சுங்கச் சாவடியில் பணப்பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.
அதாவது சுங்கச்சாவடிக்கு வருவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே உங்கள் பாஸ்ட்டேக்கில் ஏதேனும் பிரச்னை இருந்ருந்தால் கூட பணப்பரிவர்த்தனை ரத்து செய்யப்படும்.
பாஸ்டேக் ஸ்கேன் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு பாஸ்டேக், ப்ளாக்லிஸ்ட் செய்யப்பட்டாலோ அல்லது செயலற்ற நிலையில் இருந்தாலோகூட பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். அதாவது, பாஸ்டேக் இந்த இரண்டு நிபந்தனைகளையுமே கொண்டிருந்தால் "எரர் கோட் 176" உடன் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். அதோடு வாகனத்திற்கு அபராதமாக சுங்கச்சாவடி கட்டணத்தை விட 2 மடங்கு அபராதம் விதிக்கப்படும்."
அபராதங்களைத் தவிர்ப்பது எப்படி?
* பயணங்களைத் தொடங்குவதற்கு முன்பு, பாஸ்டேக்கில் போதிய பணயிருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
* பயனர்களின் விவரங்களை அவ்வப்போது பதிவு செய்து அதனை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
* சுங்கச்சாவடிகளை அடைவதற்கு முன்பு, நமது பாஸ்டேக் நிலையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.