பெரம்பலூர்,ஜன.18: பாளையம் கிராமத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் அந்தோணியார் பொங்கல் விழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடி முடிந்துள்ள நிலையில், நேற்று பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் உள்ள புனித சூசையப்பர் தேவாலயத்தில், கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் அந்தோணியார் பொங்கல் திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி நேற்று காலையில் பங்குகுரு அருட்பணியாளர் ஜெயராஜ் தலைமையில் பொங்கல் சிறப்பு பாடல் திருப்பலி நடைபெற்றது. பிறகு கிறிஸ்தவ பொது மக்களால் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட பொங்கல் மந்திரித்து அனைவருக்கும் வழங்கப் பட்டது. மாலையில் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட புனித வனத்து அந்தோணியார் சப்பர பவனியை கோவில் பங்குகுரு அருட்பணியாளர் ஜெயராஜ் மந்திரித்துத் தொடங்கி வைத்தார்.
இந்த சப்பர பவனி மேற்குவீதி, வடக்கு வீதி, யாதவர் சத்திரம், மாரியம்மன் கோவில்தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அதன் பின்னர் புனித சூசையப்பர் கோவிலில் பங்குகுரு அருட்பணியாளர் ஜெய ராஜ் தலைமையில் திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. இதில் பாளையம் மட்டுமன்றி குரும்பலூர், ரெங்கநாதபுரம், புதுநடுவலூர், சத்திர மனை, வேலூர், பெரம்பலூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post பாளையம் கிராமத்தில் அந்தோணியார் சப்பரபவனி appeared first on Dinakaran.