பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை நிலுவையை அரசு உடனே வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

3 weeks ago 4

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை கடந்த மூன்றரை மாதங்களுக்கு மேலாக வழங்கப்படவில்லை. இந்த நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அதை ஏற்க தமிழக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 35 லட்சம் லிட்டர் பாலை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் கொள்முதல் செய்கிறது. ஆவின் பாலுக்கு மிகக்குறைந்த தொகையே கொள்முதல் விலையாக வழங்கப்பட்டு வந்த நிலையில், பாமக உள்ளிட்ட கட்சிகளின் வலியுறுத்தலை ஏற்று உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது. அப்போது முதல் கடந்த ஜூன் மாதம் வரை ஒழுங்கின்றி வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை, அதற்குப் பிறகு கடந்த 118 நாட்களாக வழங்கப்படவில்லை.

ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ரூ.1.05 கோடி வீதம் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிறுவனம் பாக்கி வைக்கிறது. இந்த தொகை இப்போது ரூ.125 கோடிக்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு உழவருக்கும் ஆயிரக்கணக்கில் நிலுவைத்தொகை வழங்க வேண்டியுள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் உழவர்கள் கோடீஸ்வரர்கள் அல்ல. அவர்களால் இந்த சுமையை தாங்க முடியாது. தீப ஒளியைக் கொண்டாட அவர்களுக்கு பணம் தேவை. இதைக் கருத்தில் கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.125 கோடி நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க ஆவின் நிறுவனத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கான தீவனம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து விட்ட நிலையில், பசும்பாலுக்கு 1 லிட்டருக்கு ரூ.45. எருமை பாலுக்கு ரூ.54 என பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கும் தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article