பாலியல் வழக்குகளை விசாரிக்க 7 தனி சிறப்பு கோர்ட்டுகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2 hours ago 4

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த முன்வடிவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

குறிப்பாக, பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அது மட்டுமின்றி, பிணையில் கூட அவர்கள் வெளிவர முடியாத அளவுக்கு சட்ட திருத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல, குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆனால் ஆயுள் காலம் வரை தண்டனை நீட்டிக்கப்படலாம் என்றும், மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கும் மசோதா என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் சட்டசபையின் கடைசி நாளான இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரிக்க 7 தனி சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். டிஜிட்டல் முறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கை விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம், திருச்சி, சென்னை சுற்றுப்புற பகுதியில் 7 தனி சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படும். அதைப்போல, மாவட்டம் தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும்.

பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதிகளுக்கு முன் விடுதலை கிடைக்காத வகையில், தமிழ்நாடு சிறைத்துறை விதிகள் திருத்தம் செய்யப்படும்" என்று அவர் கூறினார்.

இதனிடையே தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தம் சட்டசபையில் நிறைவேறியது. இந்த மசோதா, கவர்னர் மூலம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது

Read Entire Article