
வாஷிங்டன்,
அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினா மாகாணத்தின் குடியரசு கட்சி எம்.பி. நான்சி மேஸ், தனது முன்னாள் காதலர் பேட்ரிக் பிரையண்ட் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அவர் தனது அனுமதி இன்றி தன்னை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததாகவும், பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும் நான்சி மேஸ் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த புகார் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு கூட்டத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது நான்சி மேஸ் தனது நிர்வாண புகைப்படத்தை ஆதாரமாக காட்டினார். அந்த புகைப்படம் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சியில் இருந்து எடுக்கப்பட்டிருந்தது. தனது முன்னாள் காதலர் வீட்டில் ரகசியமாக சி.சி.டி.வி. கேமராவை வைத்து தன்னை நிர்வாணமாக படமெடுத்துள்ளார் என்று நான்சி மேஸ் தெரிவித்தார்.
மேலும், "சுதந்திரம் என்பது வெறும் கோட்பாடு அல்ல. நீங்கள் தூங்கும்போது உங்கள் நிர்வாண உடலை யாரோ ஒருவரின் கேமரா படம்பிடிக்காமல் இருக்க வேண்டும். அது உங்கள் உரிமை. நான் ஒரு எம்.பி. ஆக மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட நபராக பேசுகிறேன்" என்று அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் நான்சி மேஸ் தனது முன்னாள் காதலர் பேட்ரிக் பிரையண்ட் மற்றும் அவரது 3 நண்பர்கள் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அவர்கள் தன்னை மட்டுமின்றி, மைனர் சிறுமிகள் உள்பட பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை நான்சி மேஸ் முன்வைத்தார்.
அதே சமயம், நான்சி மேஸ் தன் மீது போலியான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும், நாடாளுமன்ற எம்.பி. ஆக பதவி வகிக்கும் அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்ட ரீதியான நடவடிக்கைகளில் இருந்து தப்பி வருகிறார் என்றும் பேட்ரிக் பிரையண்ட் கூறியுள்ளார். மேலும், நான்சி மேஸ் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவிற்கு வெளியே, சட்டப்படி தன் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யலாம் என்றும் பேட்ரிக் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.