பாலியல் வழக்கில் நடிகர் சித்திக்கை கைது செய்ய மேலும் 2 வாரங்களுக்கு தடை!

3 months ago 15

திருவனந்தபுரம்,

கேரள திரையுலகில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக விசாரித்த ஹேமா கமிட்டி அறிக்கையில் சில பகுதிகளை கேரள அரசு வெளியிட்டது. இந்நிலையில், கேரள ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை கடந்த ஆகஸ்டு இறுதியில் வெளியிடப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு கூறியதன்படி, அதனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் கேரள அரசு ஒப்படைத்து உள்ளது.

ஹேமா கமிட்டியிடம் நடிகைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இளம் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், மூத்த நடிகர் சித்திக்கிற்கு எதிராக கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள மியூசியம் போலீசார் கடந்த ஆகஸ்டு 27-ந்தேதி வழக்கு பதிவு செய்தனர். பாலியல் பலாத்காரம் மற்றும் குற்ற நோக்குடன் அச்சுறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவானது.

2019-ம் ஆண்டிலும் அந்த நடிகை பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசினார். ஆனால், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின்னர் புதிய மீடூ சர்ச்சை மலையாள திரையுலகை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த சூழலில், அந்த நடிகை போலீசில் புகார் அளித்து இருக்கிறார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி கேரள ஐகோர்ட்டில் நடிகர் சித்திக் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எட்டு ஆண்டுகளுக்கு பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளதே? என கேள்வி எழுப்பினர். அதற்கு, 2019ல் ஹேமா கமிட்டி அறிக்கை சமர்பிக்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றம் தலையிட்ட பின்னரே அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பல பெண்கள் புகார் அளித்து வருகின்றனர்.

தன்னால் எதையும் நினைவுப்படுத்த முடியவில்லை என நடிகர் சித்திக் கூறுகிறார். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. ஆதாரங்களை அழிக்க முற்படுகிறார் என அரசு வழக்கறிஞர் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, நடிகர் சித்திக் தரப்பு மூத்த வழக்கறிஞர் வி.கிரி அவகாசம் கோரினார். அதனையேற்ற நீதிபதிகள், வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். அதேநேரத்தில் சித்திக் மீதான கைது நடவடிக்கை மேற்கொள்ள விதித்த தடையையும் நீட்டித்து உத்தரவிட்டனர்.

Read Entire Article