பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு; ஐகோர்ட்டு உத்தரவு

3 weeks ago 4

சென்னை,

சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 21ம் தேதி என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், சொந்த ஊர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் அரங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக உள்துறை முதன்மை செயலாளர், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிடது.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுவை அமைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு குறித்த விவரம்:-

இந்த விவகாரத்தில் புகார் அளித்த மாணவியின் துணிச்சல் பாராட்டத்தக்கது. பெண்ணின் விருப்பத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. ஒரு பெண் தன் விருப்பப்படி ஏன் காதல் செய்யக்கூடாது? இரவில் ஏன் தனியாக செல்லக்கூடாது?

ஒவ்வொரு ஆணும், பெண்ணுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாணவியின் தனிப்பட்ட தகவல்கள் வெளியானது ஏற்றுக்கொள்ள முடியாதது, துரதிஷ்டமானது.

பாதிக்கப்பட்ட மாணவியின் படிப்பு முடியும்வரை அவரிடம் எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது.

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக மாநில அரசு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் கசிந்ததால் மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

எதிர்காலத்தில் முதல் தகவல் அறிக்கை விவரங்கள் வெளியே கசியாமல் அரசு உறுதி செய்ய வேண்டும்' என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article