பாலசோர்: ஒடிசாவில் பாலியல் புகாருக்கு நீதி கிடைக்காத விரக்தியில் இருந்த மாணவி கல்லூரி வாசலில் தீக்குளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார். ஒடிசா சென்றிருந்த குடியரசுத் தலைவர் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ஃபக்கீர் மோகன் (எஃப்.எம்) கல்லூரியில் ஒருங்கிணைந்த பி.எட் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், தனது துறைத் தலைவரான பேராசிரியர் பாலியல் தொல்லை தருவதாகக் கடந்த ஜூன் 30ம் தேதி காவல்துறையில் புகார் அளித்திருந்தார். ஆனால், 12 நாட்கள் ஆகியும் கல்லூரி நிர்வாகமோ, காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, கடந்த 12ம் தேதி கல்லூரி நுழைவாயில் முன்பு போராட்டம் நடத்தியதுடன், தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுமார் 95 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய மாணவி, புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக மாற்று சிகிச்சை உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. கடந்த மூன்று நாட்களாக மரணத்துடன் போராடிய அந்த மாணவி, இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியின் இந்த மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஒடிசா மாநில உயர்கல்வித் துறை, மாணவியின் புகாரை முறையாகக் கையாளத் தவறிய கல்லூரி முதல்வர் திலீப் குமார் கோஷ் மற்றும் பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் சமீர் ஆகியோரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்தது.
முன்னதாக இவ்விவகாரம் ெதாடர்பாக இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, ஒடிசாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நேற்று மாலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். நீதி கிடைக்காத விரக்தியில் கல்லூரி வாசலில் தீக்குளித்த மாணவி மரணமடைந்த சம்பவம் ஒடிசா மட்டுமின்றி நாட்டையே உலுக்கியுள்ளது. ஒடிசாவில் முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், எதிர்கட்சிகளின் கடும் கண்டனத்துக்கு மத்தியில் தீக்குளித்து பலியான மாணவியின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post பாலியல் புகாருக்கு நீதி கிடைக்காத விரக்தி; கல்லூரி வாசலில் தீக்குளித்த மாணவி மரணம்: குடியரசுத் தலைவர் நேரில் ஆறுதல் appeared first on Dinakaran.