சென்னை: மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளிகளில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, பாலியல் தொல்லைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக பதியப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், போலி என்சிசி முகாம் நடத்தியதாகக் கூறப்படும் மேலும் மூன்று பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது.