பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழுக்களின் எண்ணிக்கை சட்ட வழிகாட்டலின் படி அமைக்கப்பட்டுள்ளதா?: சு. வெங்கடேசன் கேள்வி!

2 months ago 10

இந்திய விளையாட்டு ஆணையத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழுக்களின் எண்ணிக்கை சட்ட வழிகாட்டலின் படி அமைக்கப்பட்டுள்ளதா? என நாடாளுமன்றத்தில் சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது; இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் தேசிய அளவிலான சீர்மிகு நிறுவனங்கள், விரிவாக்க மையங்கள் உள்ளன. 10 ஊழியர்களுக்கு மேல் உள்ள எல்லா நிர்வாக அலுவலகங்களிலும் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது சட்டவிதி. ஆனால் 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் உள்ள விளையாட்டு ஆணையத்தில் மண்டலத்திற்கு ஒன்று வீதம் 12 குழுக்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பதில் தெரிவித்துள்ளார்.

இந்திய விளையாட்டு ஆணையத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழுக்களின் எண்ணிக்கை சட்ட வழிகாட்டலின் படி அமைக்கப்பட்டுள்ளதா? நாடாளுமன்றத்தில் சு. வெங்கடேசன் கேள்விக்கு அமைச்சர் பதில்; இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு உட்பட்ட நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உள் விசாரணைக் குழுக்கள், அவற்றின் உள்ளடக்கம், புகார்கள் பற்றி நான் எழுப்பிய கேள்விக்கு (எண் 176/ 25.11.2024) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதில் அளித்துள்ளார். இந்திய விளையாட்டுத்துறை ஆணையத்தின் கீழ் 12 மண்டல மையங்களும், பல்வேறு பயிற்சி மையங்கள் தேசிய அளவிலான சீர்மிகு நிறுவனங்கள், விரிவாக்க மையங்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட அமைப்புகள் உள்ளன.

எனது கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகம் மற்றும் 12 மண்டல மையங்களில் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், அந்தந்த மண்டல மையங்களுக்கு உட்பட்ட அமைப்புகளில் எழும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட மண்டல மையங்களின் குழுக்கள் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். 2020 – 24 க்கு இடைப்பட்ட காலத்தில் 22 புகார்கள் வந்தன என்றும் அவற்றில் 18 புகார்களுக்கு தீர்வுகள் தரப்பட்டுள்ளன என்றும், உள்விசாரணைக் குழுக்களில் சட்டத்தின்படி வெளியாட்கள் இடம் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த பதில் சட்டத்தின் நெறிகள் கடைப்பிடிக்கப்பிட்டுள்ளனவா என்ற கேள்வியை எழுப்புகிறது. பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் 2013 இன் அத்தியாயம் 2 பிரிவு 4 (1) ன் படி 10 ஊழியர்களுக்கு மேல் உள்ள எல்லா நிர்வாக அலகுகளிலும் உள் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால் மண்டல மையங்களின் உள் விசாரணைக் குழுக்களே அதற்கு கீழான நிர்வாக அலகுகளையும் கவனிக்கும் என்பது முறைதானா? என்பதை அமைச்சர் விளக்க வேண்டும். மேலும் ஒரு புகார் இரண்டு ஆண்டுகளாக, இன்னொன்று ஓராண்டாக நிலுவையில் இருப்பதன் காரணம் என்ன என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும்.

உரிய காலத்தில் நீதி வழங்கப்படாவிடில் விசாரணை முறைமை மீது நம்பிக்கை ஏற்படாது. இது குறித்து ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கள் நாட்டையே உலுக்கியது. இப் பின்புலத்தில் ஒன்றிய அரசும், இந்திய விளையாட்டுத் துறை ஆணையமும் பாலின நிகர்நிலை கூருணர்வோடு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளேன். என குறிப்பிட்டுள்ளார்.

 

The post பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழுக்களின் எண்ணிக்கை சட்ட வழிகாட்டலின் படி அமைக்கப்பட்டுள்ளதா?: சு. வெங்கடேசன் கேள்வி! appeared first on Dinakaran.

Read Entire Article