‘‘இலைக்கட்சி தலைமையிடத்தில் புகார் ஏதும் செல்லக்கூடாது என்பதற்காக தனது பவரை காண்பித்த மாஜி அமைச்சர் யாராம்..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மனுநீதி சோழன் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியின் மாஜி அமைச்சர், கொங்கு மண்டலத்தை சேர்ந்த மாஜி அமைச்சரை நேரில் சந்தித்து இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து இருந்தாராம்.. இந்த அழைப்பை ஏற்று மனுநீதி சோழன் மாவட்டத்துக்கு வந்த மாஜி அமைச்சர், மனுநீதி சோழன் மாஜி அமைச்சரிடம் சிறிது நேரம் பேசி விட்டு சென்றுள்ளார். இந்த இருவரின் சந்திப்பின் போது, கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் கூட அருகில் இல்லையாம்..
கட்சியில் தனக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதை இதன் மூலம் மற்ற முக்கிய நிர்வாகிகளுக்கு அவர் காட்டியுள்ளார். மனுநீதி சோழன் மாவட்டத்தில் தனக்கு எதிராக எவரும், தலைமையிடத்தில் புகார் செய்யவே அச்சம் கொள்ள வேண்டும் என மாஜியானவர் நினைக்கிறார் என அவரது நெருங்கிய ஆதரவாளர்களுக்குள் பேசிக்கிட்டாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பவர்புல் பாலியல் டார்ச்சர் புகார்கள் தொடர்பாக சிபிஐக்கு கடிதம் பறந்துள்ளதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தை ஒட்டிய யூனியன் பகுதியில் பல்வேறு அரசு துறைகளில் வேலை செய்யும் மகளிர்கள், அதிகாரமிக்க நபர்களால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதாக ஏற்கனவே புகார்கள் உள்ளன. இதை சிறப்பு கவனம் செலுத்தி விசாரிக்க வேண்டியவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் மவுனபுரட்சி நடக்கிறதாம்.. சமீபத்தில் ஒரு ‘10-டல்’ கல்லூரியில் பவர் புல்லான நபர், கொடுத்த டார்ச்சரில் டல்லாகி வேலையே வேண்டாம் என ஓட்டம் பிடித்துவிட்டாராம் ஒரு மருத்துவ பெண்மணி.
தற்போது அங்குள்ள மாணவிகள் மீது பவர்புல்லின் பார்வை விழுந்துள்ளதாம்.. அதாவது அடுத்த பார்வையும் கண்ணின் மணிபோல் உள்ளதால் நெருக்கடியில் இருக்கிறார்களாம் பயிலும் தரப்புகள்.. பதவிக்காலம் முடியும் தருவாயில் இருக்கும் பவர்புல் மீது ஊழல் புகார்களும் பரவி வருகிறதாம்.. நியமனம், உபகரணங்கள் மட்டுமின்றி மேம்பாட்டு பணிகளிலும் ப விட்டமின் கமிஷனாக முடக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாம்.. இதனால் இந்த விவகாரங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சிபிஐக்கும் மனுக்கள் பறந்துள்ளதாம்..
எந்த நேரத்திலும் சிபிஐ வரலாம் என்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறதாம் பயிலும் தரப்புகள்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சேலத்துக்காரர் தலைமை பதவிக்கு வந்த பிறகு இளைஞர்-இளம்பெண் பாசறை அமைப்பு இருக்கிற இடம் தெரியாம போயிக்கிட்டு இருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியில் அம்மையார் காலத்தில் துவக்கப்பட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அமைப்பு அதிக சக்தி வாய்ந்ததாக இருந்ததாம்.. இதில் பதவியில் இருந்தவர்களுக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுருக்கு..
ஆனால், சேலத்துக்காரர் தலைமைக்கு வந்த பிறகு இந்த பாசறை அமைப்பு இருக்கும் இடம் தெரியாமல் ஐசியூவில் இருக்குமளவுக்கு சென்றுவிட்டதாம்.. பாசறை பொறுப்பில் இருந்த பலர் மாற்றுக் கட்சிகளை தேடி செல்லும் நிலை தற்போது அதிகரித்துள்ளது.. சேலத்துக்காரர் கட்சி தலைமை பொறுப்பிற்கு வந்ததும், பாசறை பொறுப்பாளராக பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தைச் சேர்ந்த வேடன் பெயரில் துவங்கும் ஊரின் மாஜி எம்எல்ஏவான ஆதிசிவன் பெயரைக் கொண்ட மருத்துவரை நியமித்தார்.
ஆரம்பத்தில் படு ஆக்டிவாக காட்டிக் கொண்ட இவர், இப்ேபாது மாநிலம் முழுவதும் பயணம் செய்யாமல் ஊரில் உள்ள வீட்டிலேயே முடங்கி கிடக்கிறாராம்.. இதனால், இலைக்கட்சியின் பாசறையைச் சேர்ந்த பலர் மாற்றுக்கட்சிக்கு தாவுவது அதிகரித்துவிட்டதாம்.. இதே நிலை நீடித்தால், பூட்டு மாவட்டத்தில் இலைக்கட்சியில் பழைய நிர்வாகிகளை தேடவேண்டிய நிலை ஏற்படும் என கட்சியினர் ஆழ்ந்த கவலையில் உள்ளனராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘லண்டனுக்கு படிக்கப் போனது கீழ்த்தரமாக பேசுவதற்கு தானோ என தாமரை கட்சியின் ரெண்டாம் கட்ட பார்ட்டிகளே நொந்துக்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலராத கட்சியின் மாநில தலைவர் கர்நாடக மாஜி போலீஸ்காரர்.. இவரு வாயால் வடை சுடுவதில் ரொம்பவே வல்லவராம்.. இப்படித்தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சுட்ட வடையை நம்பி தோல்வியை சந்தித்த பிறகுதான் டெல்லி நிர்வாகிகளுக்கே இவரை பற்றி தெரிந்ததாம்.. அவர்களின் கடும் கோபத்தை தெரிந்து கொண்டவர், லண்டனுக்கு அரசியல் படிக்க போனாராம்.. இதனால இவர் மீதான கோபத்தை தற்காலிகமாக ஓரம் கட்டி வச்சிருக்காம் டெல்லி மேலிடம்..
என்றாலும் கோவையில் தோற்றதை போலீஸ்காரரால் இன்னும் ஜீரணிக்கவே முடியலையாம்.. அவருக்கு இருக்கும் கோபமெல்லாம், மின்சார மந்திரி மேலதானாம்.. ஏன்னு கேட்டால் ரபேல் வாட்ஜ் பில்லை கேட்டதுதான் காரணமாம்.. அதிலிருந்து மீண்டு இன்னுமே அவர் வெளியே வரலையாம்.. இதற்காக நிதானம் தவறி பேசியதை தாமரை நிர்வாகிகளால் கூட ஏற்றுக்கொள்ள முடியலையாம்.. டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு ஒன்றியஅரசு அனுமதி கொடுக்க கூடாதுன்னு மின்சார மந்திரி விளக்கமான அறிக்கை ஒன்றை கொடுத்திருக்காரு..
இதற்கு பதில் அளித்த மாஜி போலீஸ்காரரான அவர், மூன்றாம்தர பேச்சாளரை விட தரம் தாழ்ந்து பேசியிருக்காரு.. மந்திரியோட பெற்றோரை கீழ்தரமா விமர்சனம் செஞ்சிருக்காரு.. இந்த பேச்சுக்கு வெளிப்படையான கண்டனங்கள் வரவில்லை என்றாலும் கூட, மலராத கட்சியின் நிர்வாகிகளே தலைகுனிந்து செல்லும் நிலை ஏற்பட்டிருக்காம்.. அரசியலில் தவறுகளை சுட்டிக்காட்டுவது என்பது இயல்பானதுதான். அதற்காக தரம்தாழ்ந்து பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவருக்கு அறிவு தேவைப்பட்டதால்தான் லண்டனுக்கு படிக்கப் போனதாக சொன்னாரு.. ஆனா இன்னும் அவருக்கு அறிவு வளரல.. சித்தாந்தத்தோடு அவர் அரசியலுக்கு வந்தால் கீழ்தரமாக பேசமாட்டார். ஆனால் அவர் இறக்குமதி செய்யப்பட்ட தலைவர் என்பதால் இப்படித்தான் இருக்கும். அவர் ஐபிஎஸ் படித்தது உண்மை என்றால் அப்பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்னு ரெண்டாம் கட்ட தாமரை பார்ட்டிகளே சொல்றாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post பாலியல் டார்ச்சர் செய்யும் பவர்புல் நபர் சிபிஐ விசாரணையில் சிக்க உள்ளது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.