சென்னை: பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1200 பேர் பலியானார்கள். 250 பேரை பணய கைதிகளாக ஹமாஸ் படையினர் பிடித்து வைத்தனர். இதில், 100க்கும் மேற்பட்டோர் ஹமாஸ் பிடியில் உள்ளனர். இதையடுத்து பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் படைகள் தொடர்ச்சியாக பதிலடி கொடுத்தது. இஸ்ரேலின் ராணுவம், போர் விமானங்கள் பாலஸ்தீனத்தில் உள்ள காசா உள்ளிட்ட பல நகரங்களில் தொடர்ச்சியாக குண்டுமழை பொழிந்ததில் 42,000 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதில் பாதிபேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இஸ்ரேல்-பாலஸ்தீன போர் தொடங்கி இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில் பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். போர் நிறுத்தம் மட்டுமே பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலையை உருவாக்கும். போர் நடைபெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், மரபுகள் மீறப்பட்டுள்ளன. ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் பொதுமக்கள் பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
காசாவை தொடர்ந்து தற்போது லெபனானிலும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலால் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான ஐ.நா.சபை ஊழியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இது போருக்கான காலம் அல்ல என்று பிரதமர் மோடி சொல்வதை போல் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
The post பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.