பார்வையாளர்களுக்கு பிரத்யேக ஏற்பாடுகள்; சிறையில் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு வசதிகள் தரப்படவில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி

1 month ago 12

புழல்: சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளின் உறவினர்களும் வழக்கறிஞர்களும் கைதிகளை சந்திப்பதற்கு முந்தைய தினமே புழல் சிறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள பிரத்யேக எண்ணில் முன்பதிவு செய்து கொண்டால் மறுநாள் அவர்களுக்கான நேரம் ஒதுக்கப்படும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் உடனே பார்வையாளர்களும் வழக்கறிஞர்களும் சிறை கைதிகளை சந்திப்பதற்கு வசதியாக தனித்தனி அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், புழல் சிறையில் மேம்படுத்தப்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் நேர்காணல் அறையை சிறைத்துறை அமைச்சர் ரகுபதி இன்று திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது; உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, பார்வையாளர்கள் அறை மேம்படுத்தப்பட்டுள்ளது.

வாரம் இருமுறை, நாளொன்றுக்கு ஒரு கைதி 30 நிமிடங்கள் என்ற அடிப்படையில் 56 பேர் 3 ஷிப்ட் முறையில் ஒரே நாளில் 728 சிறைவாசிகள், உறவினர்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 50 வழக்கறிஞர்கள் தனிப்பட்ட முறையில் சிறைவாசிகளை சந்திப்பதற்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வழக்கறிஞர்களின் நேரத்திற்கு ஏற்ப கைதிகளை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலைக்கு வரும் கைதிகளின் உறவினர்கள், வழக்கறிஞர்களுக்கு என்று பார்வையாளர் அறைகளில் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

கடந்தாண்டு முதல் தரமான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. கைதிகள் பார்வையாளர்கள் தொடர்பு கொள்வதற்காக செய்யப்பட்டுள்ள இன்டர்காம் தொலைபேசியில் சிறைத்துறை எந்தவித ஒட்டுக்கேட்பு செயலிலும் ஈடுபடவில்லை. செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோது மற்ற சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்ட நடைமுறையே இவருக்கும் கடைபிடிக்கப்பட்டது. எந்தவிதமான சிறப்பு வசதிகளையும் கோரவில்லை. தனிப்பட்ட உணவையும் கேட்கவில்லை. சிறையில் கொடுக்கப்பட்ட உணவைதான் சாப்பிட்டார். தனிஅறை கேட்கவில்லை.சுகமாகவும் இருக்கவில்லை. சாதாரண சிறைவாசி போலவே இருந்தார். அவருடன் சிறையில் இருந்தவர்களை கேட்டுப்பாருங்கள். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

The post பார்வையாளர்களுக்கு பிரத்யேக ஏற்பாடுகள்; சிறையில் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு வசதிகள் தரப்படவில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article