பார்டர்-கவாஸ்கர் டிராபி; மனதளவில் தயாராக இருக்கும் அணியே இந்தத் தொடரை வெல்லும் - யுவராஜ் சிங்

2 hours ago 1

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், மனதளவில் தயாராக இருக்கும் அணியே இந்த தொடரை வெல்லும் என இந்திய முன்னாள் வீரரான யுவராஜ் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஜெய்ஸ்வால் சிறந்த திறமை கொண்டவர். அவருக்கு இந்த தொடர் பெரிய சோதனையாக இருக்கும். ஒருவேளை ஆஸ்திரேலியால் பவுன்ஸை வைத்து அட்டாக் செய்தால் அவரால் பெரிய ரன்கள் குவிக்க முடியும். சர்பராஸ் கானுக்கும் அது பொருந்தும். ஆஸ்திரேலியா உங்களை ஷார்ட் பந்துகளை வைத்து அட்டாக் செய்யும். அவர்கள் உங்களை டாமினேட் செய்ய முயற்சிப்பார்கள்.

எனவே ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது மிகவும் கடினம். ஆனால் நீங்கள் கடந்த காலங்களில் 2 முறை இங்கு வென்றுள்ளீர்கள். எனவே மீண்டும் அதை நீங்கள் செய்யாமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. ஆனால் அதற்கு தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். ஜஸ்ப்ரித் பும்ரா விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். நான் இந்தியா வெல்ல வேண்டும் என விரும்புகிறேன்.

அதேசமயம், ஆஸ்திரேலியாவும் நம்மை வீழ்த்த தயாராக இருப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் சொந்த மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். அதன் பின் அவர்கள் டி20 அல்லது ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. தொடர்ந்து 5 கடினமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது நீங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும். இருப்பினும் இப்போதுள்ள வீரர்கள் அதற்கு தயாராக இருப்பார்கள்.

அந்த தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் மனதளவில் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய பின் உங்களுடைய உடல் சோர்வாக இருக்கக்கூடும். எனவே மனதளவில் தயாராக இருக்கும் அணியே இந்தத் தொடரை வெல்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article