மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.
அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக புதுமுக வீரர்களான அபிமன்யூ ஈஸ்வரன், ஹர்ஷித் ரானா மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடருக்கான இந்திய அணியில் நிதிஷ்குமார் இடம் பெற காரணம் என்ன? என்பது குறித்து இந்திய முன்னாள் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, நிதிஷ் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் அந்த அளவுக்கு முதல் தர கிரிக்கெட்டிலோ அல்லது புள்ளி விவரங்களின் அடிப்படையில் எழுதுவதற்கு எதையும் குறிப்பிடத்தக்க அளவில் விளையாடவில்லை. ஆனால் அவர் மிகவும் நம்பிக்கை கொண்ட திறமைசாலி.
அவர் வேகப்பந்து வீச்சாளர் மட்டுமல்லாமல், சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அழுத்தமான சூழ்நிலைகளில் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுவே அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கு தேர்வு செய்யப்பட்டதற்கான காரணமாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.