பார்டர்-கவாஸ்கர் கோப்பை; ரிஷப் பண்ட்க்கு அறிவுரை வழங்கிய இந்திய முன்னாள் வீரர்

12 hours ago 1

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடந்துள்ள 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் கடந்த 21-ந்தேதியில் இருந்து அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்த ரிஷப் பண்ட் இந்த தொடரில் மிகவும் சுமாராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ரிஷப் பண்ட்க்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ரிஷப் பண்ட் மைதானத்திற்குள் வந்ததும் ஆக்ரோஷமாக விளையாட நினைத்து ஆட்டம் இழந்து வெளியேறுகிறார். என்னை பொறுத்தவரை முதல் அரைமணி நேரத்திற்கு ஆடுகளத்தையும், பவுலர்களையும் நன்கு புரிந்து கொண்டு விளையாட வேண்டும். அந்தவகையில் எதிர்வரும் 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் மைதானத்தின் தன்மையை அறிந்து பந்திற்கு மரியாதை கொடுத்து விளையாட வேண்டும்.

அதன்பிறகு சூழலை புரிந்து கொண்டு அதிரடியாக விளையாடினால் அவரால் பெரிய ரன் குவிப்பை வழங்க முடியும். ஆஸ்திரேலிய வீரர்கள் ரிஷப் பண்ட்டிற்கு எதிராக பந்தின் கோணத்தை மாற்றி வீசுகிறார்கள். எனவே அதை எல்லாம் கணித்து அவர் சமாளித்து பேட்டிங் செய்து விட்டால் நிச்சயம் அவரால் பெரிய ரன் குவிப்பை வழங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article