பாராமுகம் கூடாது

1 month ago 7

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த வாரம் பெஞ்சல் புயலாக உருமாறியது. இந்த புயலானது மிகவும் மெதுவாக கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னைக்கு அருகே புயல் கரையை கடக்கும் என்ற கணிப்பும் பொய்த்து, மரக்காணம் அருகே கரையை கடந்தது. இதனால் புதுச்சேரி மாநிலம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. அதேபோல் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியது.

குறிப்பாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோரம் வசித்த மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். 14மாவட்டங்களில் இதன் தாக்கம் பெருமளவில் இருந்தது. திருவண்ணாமலையில் திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 உயிர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி மக்களின் உடமைகள் மட்டுமன்றி உயிருக்கும் உலை வைத்துச் சென்றது பெஞ்சல் புயல்மழை. இருப்பினும் திறம்பட பாதிப்புகளை எதிர்கொண்டது தமிழ்நாடு அரசு. புயலிலும் சூறாவளியாய் சுழன்றது அரசு இயந்திரம். இதன்காரணமாக பாதிப்புகளிலிருந்து சற்று ஆசுவாசம் அடைந்தனர் மக்கள்.

இப்படிப்பட்ட சூழலில் கடந்த 2ம்தேதி ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் ‘‘பெஞ்சல் புயலால் ஏற்பட்ட சேதங்களில் இருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டும். முதற்கட்ட ஆய்வின்படி, தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது. பாதிப்புகளின் அளவு மற்றும் அவசரத்தேவையை கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும். பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய உடனடியாக ஒன்றிய பல்துறை குழுவை அனுப்பி வைக்க வேண்டும்,’’ என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து 3ம்தேதி முதல்வரை தொடர்பு கொண்ட பிரதமர், தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல்பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். இதன் தொடர்ச்சியாக வெள்ள பாதிப்புகளை ஆராய்வதற்கான ஒன்றிய அரசின் குழுவினர் நேற்றுமுன்தினம் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் முதல்வருடனும் ஆலோசனை நடத்தினர். அப்போது பயிர்கள், கால்நடைகள், கட்டிடங்கள், உடமைகள் என்று மக்களுக்கு ஏற்பட்ட புயல்பாதிப்புகளை நிரந்தரமாக சரிசெய்யவும், நிவாரணம் வழங்கவும் ரூ.6,675 கோடி தேவைப்படுகிறது. இதை ஒன்றிய அரசு வழங்கவேண்டும் என்று ஆணித்தரமாக வலியுறுத்தி உள்ளார்.

இந்தநிலையில் மாநில பேரிடர் நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ரூ.944 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில், ‘‘கடந்த 30ம்தேதி, பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு நிவாரண உதவி அளிக்கும் வகையில் மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஒன்றிய அரசின் நிதியாக ரூ.944.80கோடி வழங்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது,’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்புகளை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி முதல்வர் கேட்ட நிதிக்கும், இதற்கும் உண்டான வித்தியாசம் மலைக்கும், மடுவுக்குமானது.

அதேநேரத்தில் ஒன்றியக்குழுவின் இறுதி அறிக்கை கிடைத்தவுடன் கூடுதல் நிதி ஒதுக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் நிகழ்ந்த இயற்கை பேரிடர்களின் போது மாநில அரசு கேட்ட நிதியும், ஒன்றிய அரசு ஒப்புக்கு ஒதுக்கிய நிதியும் சர்ச்சைகளின் உச்சமானது. பெஞ்சல் புயல்பாதிப்பு நிவாரண நிதியிலும் அதுபோன்ற பாராமுகம் இருக்கக் கூடாது என்பதே பரிதவித்து நிற்கும் தமிழ்நிலத்து மக்களின் எண்ண ஓட்டமாக நிற்கிறது.

The post பாராமுகம் கூடாது appeared first on Dinakaran.

Read Entire Article