சென்னை: பாம்புக் கடியை "அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக" அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், தரவு சேகரிப்பு, மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் பாம்பு கடியால் இறப்பதைத் தடுப்பதற்கான விஷமுறிவு மருந்து வழங்குவதன் மூலம் சிகிச்சை மேம்படுத்தப்படும், என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன் கீழ், பாம்புக் கடியை "அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக" (Notifiable Disease) தமிழக அரசு அறிவித்துள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையால் நவம்பர் 4, 2024 அன்று அரசாணை வெளியிடப்பட்ட பிறகு, இதற்கான அறிவிப்பை 6 நவம்பர் 2024 அன்று தமிழக அரசால் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பாம்பு கடி விஷம் என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு தீவிர மருத்துவ நிலை. இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல நாடுகளில் உள்ள கிராமப்புற மக்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு தடுக்கக்கூடிய பொது சுகாதார நிலை.