திண்டிவனம்: பரப்பான சூழலில் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்துக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தன்னிச்சையாக அழைப்பு விடுத்துள்ளார். இதில் கட்சித் தலைவர் அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தந்தை-மகன் மோதல் முடிவுக்கு வரவில்லை என்று நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.
பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின்போது மாநில இளைஞரணி தலைவராக தனது பேரனான பரசுராமன் முகுந்தனை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தால் இருவருக்கும் மேடையிலேயே மோதல் வெடித்தது. பின்னர் மூத்த நிர்வாகிகளால் சமரச முயற்சிகள் எடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்தது. இருப்பினும் சித்திரை முழுநிலவு மாநாடு காரணமாக உள்கட்சிக்குள் அமைதியான சூழல் நிலவியது.
கடந்த மே 11ம் தேதி நடைபெற்ற சித்திரை முழுநிலவு மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் செயல்கள் குறித்து கடுமையாக எச்சரித்து பேசினார். கட்சிக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் உழைக்காவிடில் யாராக இருந்தாலும் பதவி பறிக்கப்படும். அது எம்எல்ஏவாக இருந்தாலும் சரி என்று கூறினார். மேலும் கட்சியில் நான் தான். நான் இருக்கும் வரை நான் எடுப்பதுதான் முடிவு என்ற தோரணையில் அவரது பேச்சு இருந்ததால் மீண்டும் அன்புமணி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்த பரபரப்பான சூழலில் பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் 16ம் தேதி (இன்று) காலை 10 மணி அளவில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும். இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று சமூக வலைதளத்தில் ராமதாஸ் பதிவு செய்துள்ளார். இது அக்கட்சி நிர்வாகிகள் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மாவட்ட தலைவர்கள், செயலாளர்களில் சிலர், இக்கூட்டத்தில் பங்கேற்றால் அன்புமணி என்ன சொல்வார், என்ன செய்வார் என்ற பயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. சிலர் தோட்டத்திற்கு வருவதை புறக்கணிக்கும் முடிவில் இருப்பதாகவும் அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகின்றன.
இக்கூட்டத்திற்கு பாமக தலைவரான அன்புமணிக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அன்புமணி கலந்து கொள்வாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில், பாமக மூத்த நிர்வாகிகள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். இன்றைய கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை ராமதாஸ் எடுப்பார் என்று கூறப்படும் நிலையில் தைலாபுரம் தோட்டம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு முன்பே ராமதாஸ், அன்புமணி இணைந்து விட்டதாகவும், இருவரும் மேடையில் ஒன்றாக மாநாட்டை நடத்தி முடிப்பார்கள் என்றும் கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
ஆனால், மாநாட்டில் மகனிடம் வெறுப்பு காட்டும் வகையிலேயே ராமதாசின் கருத்துக்கள் அமைந்திருந்ததாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் உலாவின. தற்போது ராமதாஸ் தன்னிச்சையாக கூட்டத்தை கூட்ட முடிவெடுத்துள்ள நிலையில், இதை தடுக்கும் முயற்சியில் அன்புமணி செயல்படுவார் என்பதால் நேற்றைய தினமே, தலைமை நிலைய செயலர் அன்பழகன் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகளை ராமதாஸ் தைலாபுரத்துக்கு அவசரமாக அழைத்து ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது. ஆனால் மாநாட்டை முடித்த கையோடு முக்கிய நிர்வாகிகளுக்கு பனையூரில் விருந்து வைத்த அன்புமணி, தற்போது வரை தோட்டத்தின்மீது நாட்டம் இல்லாமல் இருப்பதால் அவரின் வழி தனி வழி தான் என்று நிர்வாகிகள் கூறி வருகிறார்களாம். தந்தை, மகன் இடையே மீண்டும் பனிப்போர் உருவாகி இருப்பதால் பாமக வட்டாரத்தில் தொடர்ந்து சலசலப்பு நீடிக்கிறது.
The post பாமகவில் அதிகார போட்டியால் குழப்பத்தில் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களுடன் ராமதாஸ் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.