பானி பூரி கீ செயின், டீ கிளாஸ் நெக்லஸ் , கப் கேக் தோடு… கலக்கும் மினியேச்சர்கள்!

3 months ago 20

‘மினியேச்சர்களில் நிறைய வகைகள், பார்த்திருப்போம். ஆனால் கோயம்புத்தூரை சேர்ந்த சரண்யா உருவாக்கும் க்ளே மினியச்சர்கள் கழுத்து, காது, விரல்கள், என கியூட்டாக மின்னுகின்றன. இவரின் உணவு அடிப்படையிலான மினியேச்சர் நகைகளுக்கு தனி ரசிகைகள் பட்டாளம் உலகம் முழுவதிலிருந்தும் ஆர்டர்கள் செய்து வாங்குகிறார்கள். எப்படி தோன்றியது இந்த ஐடியா உற்சாகமாக பேசுகிறார் சரண்யா. ‘எனக்கு சொந்த ஊர் சென்னை தான். பிகாம், எம்பிஏ முடிச்சிருக்கேன். கல்லூரி முடித்த போது கேம்பஸ் இன்டர்வியூவில் ஒரு வேலைக்கு தேர்வு ஆனேன். ஆனால் சின்ன வயதிலிருந்து இந்த கிளே மினியேச்சர்கள் மீது ஆர்வம் அதிகம். அதனால் தொடர்ந்து இதையே பிசினஸாக செய்யத் துவங்கிட்டேன். இப்போ கோயம்புத்தூரில் திருமணத்திற்கு பிறகு செட்டில் ஆகிட்டேன். அங்கேயும் இந்த பிசினஸை விடாமல். கடந்த பத்து வருடமாக செய்துட்டு இருக்கேன். ஆரம்பத்தில் மினியேச்சர் மேக்னெட் டெக்கரேஷன் பொருட்கள்தான் செய்தேன். அதாவது இந்த பிரிட்ஜ், கபோர்டுகளில் ஓட்டக் கூடிய காந்த அலங்கார பொருட்கள் தான் செய்தேன்’ என்னும் சரண்யா எப்படி இந்த க்ளே நகைகள் செய்ய துவங்கினார் என மேலும் தொடர்ந்தார்.

‘என்னுடைய டார்கெட் 15 முதல் 35 வயது வரையிலான பெண்கள் தான். காரணம் பேன்சி நகைகளை பொருத்தவரை இந்தியாவில் பெண்கள் 30 வயதிற்கு பிறகு பயன்படுத்த தயங்குகிறார்கள். அதன் பிறகு வெள்ளி, தங்கம் என உலோக நகைகளுக்கு மாறிடுறாங்க. இது ஒரு விதமான தயக்கம் தான். எப்படி அந்த காலத்து அம்மாக்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு முடியை நீளமாக தொங்கவிடாமல் கொண்டை போட்டுக் கொள்வார்களோ அப்படித்தான் இதுவும். ‘இனிமே எப்படிப்பா இப்படி சின்ன குழந்தைகள் மாதிரி பேன்சி நகைகள் பயன்படுத்துவது ‘அப்படின்னு குறைந்தபட்சம் கவரிங் நகைகளுக்காவது மாறிடறாங்க. ஆனாலும் இப்படியான நகைகள் போட்டுக் கொள்ளும் ஆசை அவர்களுக்கு உள்ளூற இருக்கத்தான் செய்கிறது. அப்படி யோசிக்காமல் குழந்தை மனம் உள்ள 40 பிளஸ் பெண்களும் என்னிடம் இந்த நகைகளை விருப்பப்பட்டு வாங்கிக்கறாங்க. உணவு யாருக்கு தான் பிடிக்காது அதனால்தான் என்னுடைய மினியேச்சர்கள் பெரும்பாலும் உணவு அடிப்படையிலானதா இருக்கும் . அதிலும் இந்த சென்னை மாதிரி பிசி நகரங்களில் டீ குடிக்காத மக்களை விரல் விட்டு எண்ணிடலாம். அந்த அளவுக்கு பெருநகரங்களில் டீ காபிக்கு மிகப்பெரிய இடம் உண்டு. போலவே மாலை நேர ஸ்நாக்ஸ் வெரைட்டிகளுக்கும் ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பார்கள். இதை என் மனதில் வைத்து என்னுடைய மினியேச்சர்களை செய்தேன். ஓரியோ பிஸ்கட், சிப்ஸ், டீ கிளாஸ் நெக்லஸ் செட், கப் கேக் , கூல் ட்ரிங்ஸ் பாட்டில், சிப்ஸ் பாக்கெட் தோடுகள், காபி – பிஸ்கட் நிறைந்த தட்டு, மேலும் கீ-செயின்களின் நிறைய வகையான வெரைட்டிகள், உடன் மேக்னெட் டெக்கரேஷன்கள் எல்லாமே டிசைன் செய்கிறேன்’ இந்தியாவில் வரவேற்பு எப்படி இருக்கு தொடர்ந்தார் சரண்யா.

‘இந்தியா பொறுத்தவரை மற்ற நாடுகளை விட குறைவா தான் இருக்கு. மேலும் தென்னிந்தியாவில் இதற்கான வரவேற்பு ரொம்ப ரொம்ப கம்மி. ஆனாலும் இதனுடைய சிறப்பறிந்து வாங்குகிற மக்கள் நான் அதிகம் விலை சொன்னாலும் கூட தயங்காமல் வாங்கறாங்க. ரூ.100 முதல் ரூ.3500 வரையிலும் என்னிடம் மினியேச்சர் புராடெக்ட்கள் இருக்கு. மேலும் தென்னிந்திய கஸ்டமர்கள் கூட அதிகம் வெளிநாடுகளில் இருந்து தான் என்னிடம் ஆதரவுகள் தருகிறார்கள். இங்கே இருந்து ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவுதான். மேலும் இதை இவ்வளவு விலை கொடுத்து வாங்கணுமா என யோசிக்கும் மனநிலையும் இருக்கு ‘ யாவரும் தயங்காமல் அணியலாம் என்கிறார் சரண்யா.
‘ஜிப்ஸி, ஃபங்கி, குவர்கி டைப் உடைகள் நகைகள் விரும்பும் பெண்கள் தான் இப்படியான க்ளே நகைகளை அதிகம் விரும்பி பயன்படுத்துறாங்க. அதனால்தான் என்னுடைய டார்கெட் கஸ்டமர் குழந்தைகள் முதல் 35 வயதைத் தாண்டியதேக் கிடையாது. மேலும் டெகரேஷன் ஐட்டங்களும் கூட அப்படியான லைட் ஹார்ட் மனநிலை உள்ளவர்கள் தான் வாங்குறாங்க. எனக்கு மட்டும் கிடையாது நூல் நகைகள், க்வில்லின் பேப்பர் நகைகள், டேரகோட்டா நகைகள், இறகு நகைகள், இப்படி இந்த பிசினஸும் ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு மட்டும்தான் செய்கிறாங்க. ஏன் நம்ம வீட்டு அம்மாக்களே கவரிங் நகைகள் பயன்படுத்துவதை கூட ஒரு வயதுக்கு பிறகு வேண்டாம் என நினைக்கிறார்கள். இதெல்லாம் ஸ்டேட்டஸ் மற்றும் வாழ்க்கை நிலையையும் பிரதிபலிக்கிறதால் இன்னமும் இந்த நிலை மாறலை. ஆனால் இப்போ பெண்கள் ஐடி, மீடியா என வேலைக்குச் செல்வதால் நிறைய 35 வயதைத் தாண்டிய பெண்களும் கூட இந்த நகைகள் மேலே ஆர்வம் காட்டத் துவங்கியிருக்காங்க’ என்னும் சரண்யா தன்னுடைய பிசினஸ் குறித்து மேலும் விவரங்களைப் பகிர்ந்தார்.

‘நான் இரண்டு விதமான க்ளே பயன்படுத்துறேன். பாலிமர்க்ளே, ஏர் டிரை க்ளே. நான் இந்த பிசினஸ் ஆரம்பிச்ச நேரம் பேஸ்புக் தான் டிரெண்டிங். இப்போ இன்ஸ்டாகிராமில் அதிகம் பிசினஸ் ஆகுது. மேலும் ஒரு சில பிசினஸ் வீடியோக்கள் போர்டல்களிலும் இருக்கேன். தோடுகள், பென்டன்ட் செட், பிரேஸ்லெட், கீ செயின்கள், மேக்னெட் டெக்கரேஷன், சுவர் அலங்காரங்கள் இப்படி எல்லா வகையிலும் என் கிட்ட ப்ராடக்டுகள் இருக்கு. அதேபோல் இந்த விழாக் காலங்களிலும் அதை அடிப்படையாக வைத்து மினியேச்சர்கள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். தீபாவளி எனில் பலகாரங்கள் அடங்கிய தட்டு, கிருஷ்ணர் ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி வேலைகளில் கிருஷ்ணர் மற்றும் விநாயகர் மினியேச்சர்கள், இப்படி நிறைய வெரைட்டிகள் சீசனை டார்கெட் செய்து உருவாக்குவேன். குறிப்பாக குழந்தைகளுக்குப் பிடித்த சிப்ஸ் பாக்கெட்கள், ஓரியோ, பார்லேஜி உள்ளிட்ட நகைகள், கப் கேக், வாழை இலை விருந்து, பானி பூரி பிளேட், கிரிக்கெட் டைம் ஸ்நாக்ஸ் கீ செயின், இளைஞர்களுக்கான கூல்ட்ரிங்ஸ், மற்றும் ஸ்நாக்ஸ் கீ செயின்கள் மேக்னெட்களில் கிச்சன்களுக்கான ஃபுட் தட்டுகள் என நிறைய செய்கிறேன். விரைவில் இதற்கான வகுப்புகளும் எடுக்கும் எண்ணம் இருக்கு. நிறைய பேர் ஆன்லைன் வகுப்பாவது எடுங்க என கேட்கறாங்க. அதற்கான திட்டங்களும் இருக்கு. எல்லாமே பக்கத்து வீட்டுக் குட்டிப் பையனுக்கு ஒரு மினியேச்சர் ஸ்கூல் புராஜெக்ட் செய்து கொடுத்ததில் ஆரம்பித்தது. இதோ இன்னைக்கு இதுவே என் அடையாளமா மாறிடுச்சு’ முகம் மலர்கிறார் இந்த மினியேச்சர் ஸ்பெஷலிஸ்ட் சரண்யா.
– ஷாலினி நியூட்டன்

 

The post பானி பூரி கீ செயின், டீ கிளாஸ் நெக்லஸ் , கப் கேக் தோடு… கலக்கும் மினியேச்சர்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article