பண்டரீபுர வாசியான பாண்டுரங்கப் பெருமானிடம் அளவு கடந்த பக்தியுடன் விளங்கிய பக்தர்கள் அநேகம் பேர். அவர்களிலே சேற்றிலே மலர்ந்த செந்தாமரை போல தோன்றி விளங்கியவள் கானோ பாத்திரை.‘மங்களபட்’ என்னும் ஊரிலே, இசைவேளாளர் வகுப்பிலே சியாமா என்றொரு பெண்மணி தோன்றி வசித்து வந்தார். இசையிலும் நடனத்திலும் நல்ல தேர்ச்சி பெற்றவள். இவளை விஞ்சக் கூடியவர் அந்தப் பகுதியிலேயே இல்லை. அத்தகைய சிறப்பும் புகழும் பெற்று விளங்கினாள் சியாமா. இவளது ஒரே மகள் தான் கானோபாத்திரை.கானோ பாத்திரை நல்ல அழகும், உடற்கட்டும் தெய்வீகச் சிற்பம் போன்ற தோற்றமும் கொண்டவள். இத்துடன் தெய்வ பக்தியும் நல்ல இசை ஞானமும் ஒருங்கே கூடி விளங்கின. இவளது தெய்வீகப் பாடல்கள் மக்கள் மனதைக் குளிர்வித்தன. சியாமாவின் மகள் தெய்வப் பிறவி என்று கொண்டாடினர் ஊரார்.
சியாமா தெய்வ பக்தியில் சிறந்தவள் தான் என்றாலும் மகள் கானோ பாத்திரை தாயையும் மிஞ்சிய பக்தையாக விளங்கினாள். இவளது மனம் எப்பொழுதும் பண்டரீபுரத்தான் பாண்டுரங்கனின் திருவடிகளிலே லயித்திருந்தது.பேரழகியான தன் மகளின் ஆடல் பாடல்களை அவ்வூர் அரசன் முன் அரங்கேற்றி, பேரும் புகழும் பொருளும் பெற்று மகிழ விரும்பினாள் தாய். தன் விருப்பத்தை மகளிடம் தெரிவித்தாள்.இதைக் கேட்ட மகள், ‘‘அம்மா! நீ அரசனுக்கு என்னை அர்ப்பணித்து அதனால் பெயரும் புகழும் பொருளும் பெற்று விட்டால் போதும், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியோடு இருக்கலாம். அதுவே வாழ்க்கையின் லட்சியம் என்று நினைத்து விட்டாய்! நீயே ஆழ்ந்து சிந்தித்துப்பார். நினைத்த பொழுது அழியக் கூடிய இந்த உடலையும், இதனால் அடையக்கூடிய புகழையும் பெரிதாக எண்ணி, நாட்டை ஆளும் அரசனது நட்பு நமக்குக் கிடைத்து விட்டால் போதும், அதைக் காட்டிலும் பெரும் பேறு வேறு எதுவும் இல்லை என்றும் நினைக்கிறாய்.
இந்த அற்பசுகம் தரும் வாழ்க்கையே வெறும் மாயை அம்மா. இதற்கெல்லாம் துணை போகாதே! இதையெல்லாம் நான் மிகவும் வெறுக்கிறேன். அம்மா, உன் அன்பால் உன் போதனையால் எனக்கு நினைவு வந்த நாளிலிருந்து பண்டரீநாதன் பாண்டு ரங்கனையே என் துணைவனாக, என் மணாளனாக வரித்து விட்டேன். அவனையே எண்ணி எண்ணி வாழ்கிறேன். இரவும் பகலும் அந்த பாண்டுரங்கனே என் கண்முன் ஆனந்தத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறான். ஆகவே எனக்கு அரசன் ஒரு பொருளாகவே தோன்றவில்லை. தாயே! நீ என்னை வற்புறுத்தி அந்த இழி தொழிலில் வீழ்ந்து விடாதே!’’ என்றாள்.தெய்வ பக்தியுள்ள சியாமாவுக்கு தன் மகள் கானோ பாத்திரையின் சொற்கள் அமுதமாக மாறி ஆனந்த மூட்டின. ‘இந்த இளமையின் மிடுக்கிலே இவள் இவ்வாறு பேசுகிறாள். மிகவும் சந்தோஷம் தான். ஆனால், இந்த நிலையிலேயே நீடித்து நிற்க இவளால் முடியுமா? ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் அதிகார வெறியர்கள் இவளை விட்டு வைப்பார்களா? உம்ம… இவள் எண்ணப்படியே நிலைத்து நிற்கட்டும். அப்படி நிலை நிற்க முடியாமல் வீழ்ந்து விட்டாலும் இவள் இணிகையர் குலத்தில் உதித்தவள் தானே? யார் என்ன சொல்ல முடியும்?’’ என்று எண்ணியவாறு தன்னையே தேற்றிக் கொண்டாள்.
நாட்கள் நகர்ந்தன. ஆஷாட மாதம் எனும் ‘ஆடி’ மாதம் பிறந்து விட்டது. ஒரு நாள், பண்டரீபுரம் செல்லும் யாத்திரீகர்கள் அடங்கிய கோஷ்டி ஒன்று அந்த ஊருக்கு வந்தது. நாம சங்கீர்த்தனம் முழங்கிய வண்ணம் கானோ பாத்திரையின் வீட்டு வாசலின் முன் நின்றது.அந்த யாத்திரீகர்கள் கோஷ்டியைக் கண்டு கானோ பாத்திரை மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தாள். அவர்களுடன் பண்டரீபுரம் புறப்பட ஆயத்தமானாள். தாயைப் பார்த்து, ‘‘அம்மா… என் கணவன் என்பதி பண்டரீநாதன். அவனே நான் என்றோ மணந்து கொண்டு விட்டேன். என் மணாளன் அவன். ரொம்ப நாளாக என்னை வரச் சொல்லி அழைத்துக் கொண்டே இருக்கிறான். போகிறேன் அம்மா!’’ என்றாள். பதிலுக்குக் காத்திருக்கவில்லை அவள். கிளம்பி விட்டாள். தாயால் தடுக்க முடியவில்லை. செய்வதறியாது திகைத்து நின்றாள்.கானோ பாத்திரை அவர்களோடு போய் சேர்ந்து கொண்டு விட்டாள். மகளைத் தடுக்கவும் முடியாமல், ‘போய் வா’ என்று சொல்லவும் முடியாமல் தவித்து நின்று விடை கொடுத்தாள் சியாமா.
யாத்திரீகர்களின் கோஷ்டியின் முன்னணியிலே, கையிலே சிப்ளாக் கட்டையைத் தட்டிக் கொண்டு ‘ஜெய் ஜெய் விட்டால்…. ஜெயஹரி விட்டல்’ என்று தேனினும் இனிய குரலில் பாடிக் கொண்டு, சென்ற பக்தை கானோ பாத்திரையைக் காணவே ஊர் ஊராகக் கூட்டம் கூடிற்று.மகாராஷ்டிராவின் கிராமப் பகுதிகள் மற்றும் நகர்ப் புறங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் ‘வர்காரிகள்’ என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ‘வர்காரி’களுக்கு பாண்டு ரங்கனே கண்கண்ட தெய்வம். பண்டரீபுரமே வைகுண்டம். வருஷத்தில் இரண்டு தடவை ஆடி மாத ஏகாதசி மற்றும் கார்த்திகை மாத ஏகாதசி நாட்களில் பண்டரீபுரம் வந்து விட்டலனை தரிசிக்காவிட்டால் அவர்களுக்கு தேகம் தரிக்காது. ‘விடோபா, விடோபா’ என்று புலம்பிக் கொண்டே வயல்களிலும், சிறு சிறு தொழில் நிலையங்களிலும் பணிபுரிகிறார்கள் அவர்கள் விவசாயம், சிறுகடை இவையே அவர்களுக்கு ஜீவாதாரத் தொழில்கள். பண்டரீபுரத்திற்கு வருவது, விட்டலனை தரிசிப்பது இரண்டு அவர்களுடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டிருக்கிறது. ஆடி ஏகாதசியே அவர்களுக்குப் பெருந்திருவிழாவாகும்.
ஆண்டுக்கு இரண்டு முறை அவர்கள் மகாராஷ்டிர மெங்கிலுமிருந்தும் லட்சோப லட்சம் பேர் கூட்டம் கூட்டமாக நாம சங்கீர்த்தனம் செய்த வண்ணம் நீண்ட நடை பயணமாக பண்டரீபுரம் விட்டலனை தரிசிக்கக் கிளம்பி விடுகிறார்கள். உள்ளூர் தெய்வங்களை சிறு பல்லக்குகளில் ஏற்றிக் கொண்டு, பஜன்களைப் பாடிக்கொண்டு, நாம சங்கீர்த்தனம் முழங்கிக் கொண்டு வருவார்கள். ‘வர்காரி யாத்திரை’ எனப் படும். இந்த நீண்ட நடைப் பயணம் உலகப்பிரசித்தி பெற்றது. இரவும் பகலுமாக பல நாட்கள் யாத்திரை செய்து பண்டரீபுரம் அடைகிறார்கள். அவர்களை ஒவ்வொரு ஊரிலும் வரவேற்று, உணவு, உறைவிடம் கொடுத்து உபசரித்து வழி அனுப்பி வைக்கிறார்கள் மக்கள். இவர்கள் வருகிற வழி எல்லாம் தண்ணீர்ப் பந்தல்கள், அன்னதான சத்திரங்கள் வைத்து தர்மம் செய்கிறவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இப்படி காலணா செலவில்லாமல் கால் நடையாகவே இம்மாதிரி பல லட்சம் பேர் பண்டரீபுரம் வந்து விட்டலனை தரிசித்து விட்டு கால் நடைப் பயணமாகவே திரும்பிப் போய் விடுகிறார்கள்.
இப்படி வந்த யாத்திரீகர்கள் கோஷ்டியுடன் தான் கானோ பாத்திரை சேர்ந்து கொண்டு பண்டரீபுரம் நோக்கிப் பயணம் புறப்பட்டாள்.பண்டரீபுரத்தை இந்த யாத்திரீகர் கோஷ்டி நெருங்கும் போது ஒரு பெரிய விபரீதம் நேர்ந்தது. அந்தப் பகுதியை ஆண்டு வந்த அரசனுக்கு கானோ பாத்திரை மீது ஒரு கண் இருந்தது. ‘நம் ஆஸ்தான வித்தகி சியாமாவின் மகள் தானேஇவள். எங்கே போய் விடப் போகிறாள்’ என்று அவள் கனிவதற்காகக் காத்திருந்தான். அவள் வர்காரி யாத்திரீகர் கோஷ்டியுடன் சேர்ந்து கொண்டு பண்டரீபுரம் போய் விட்ட செய்தி சில நாட்கள் கழித்தே அவனுக்குத் தெரிய வந்தது. உடனே தனது படை வீரர்களை அனுப்பித் தேடச் செய்தான்.ஆனால் பட்சி பறந்து விட்டதை இப்பொழுது அறிந்ததும், உடனே அவளைப் ‘பிடித்துக் கொண்டு’ வரும்படி சேவகர்களை ஏவி விட்டான். பண்டரீபுரத்து கோயில் வாசலிலே சேவகர்கள் வந்து கானோ பாத்திரையை வழி மறித்து விட்டார்கள். விட்டல பக்தை கானோ பாத்திரையை கோயிலின் படி மீது கால் எடுத்து வைத்தபோது வந்து வழி மறித்து விட்டார்கள். திடுக்கிட்டுத் தவித்துப் போய் விட்டாள் கானோ பாத்திரை. ‘பகவானே, பாண்டுரங்கா, என் விட்டலா, என பிரபு… என் இறைவா.
இது என்ன சோதனை? என்று கதறித் துடித்தாள். அவள் உடல் நடுங்கியது.அரசனின் ஆட்கள் கோபத்தோடு, ‘‘ம்ம்…. சீக்கிரம் கிளம்பு-எங்களுடன்!’’ என்றார்கள். ஒரு கணம் யோசித்த கானோ பாத்திரை, ‘‘இதோ… வருகிறேன். ஆனால் அதற்கு முன் என்னுடைய ஒரே ஆசையை நிறைவேற்றிக் கொண்டு விடுகிறேன். இவ்வளவு தூரம் நடந்து வந்திருக்கிறேன், விட்டலனைப் பார்ப்பதற்காக. கொஞ்ச தூரமா நடந்தேன்’. கல்லிலும் முள்ளிலும் கடுமையான வெய்யிலிலும் நடந்து என் பாதங்கள் எப்படி வெடித்துப் புண்ணாகி விட்டன பாருங்கள்’ தயவு செய்து சிறிது நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்த பாண்டுரங்கனை ஆசை தீர ஒரே ஒருமுறை பார்த்து விட்டு வந்து விடுகிறேன். இதோ கண நேரத்தில் வந்து விடுகிறேன்!’’ என்று சொல்லி விட்டு, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக ‘சட்’டென்று வேகமாக ஓடி விட்டலனின் கோயிலுக்குள் நுழைந்து விட்டான்.
‘சரி, பகவானைப் பார்த்து விட்டு வரட்டும்’ எங்கே ஓடி விடப் போகிறாள்’ என்று சொல்லி விட்டு கோயில் வாசல் படிகள் மீது உட்கார்ந்தார்கள் சேவகர்கள். கையில் மாலையுடன் நேரே விட்டலனின் கருவறைக் குள்ளேயே ஓடினாள் கானோ பாத்திரை ‘‘பெருமானே! என் பிராணபதியே! எனை ஆள வந்த மனசு வாளா! ஏ. ஆபத் பாந்தவா, அநாத ரட்சகா, அடியேன் தங்களையே கணவனாக அடைய விரும்பியது தாங்கள் அறியாததா? தங்களுக்குரிய பொருளாகிய என்னை வேறொருவன் தொடுவது தகுதியோ? உனக்கு அர்ப்பணித்த இந்த உடலை சாதாரணமானிடன் தொடலாமா? தங்களுக்கே அடிமையான நான் வேறு ஒரு மனிதனின் கையிலகப்படுவதும் நீதியாகுமோ? எனக்கு இனி உலக வாழ்க்கையே வேண்டாம். பண்டரீநாதா, பாண்டுரங்கா, என்னை ஏற்றுக் கொள்!’’ என்று பலவாறு புலம்பி கண்ணீர் சோர கையில் இருந்த மாலையை விட்டலனின் கழுத்திலிட்டதும், அவள் மயங்கி சரிந்து விழ, திடீரென்று பிரகாசமாக அவளே ஒரு ஜோதியாக மாறி விட்டலனுடன் கலந்து விட்டாள்.
காலமெல்லாம் காத்திருந்தவள் கணப் பொழுதில் ஐக்கியமானாள். அடியற்ற மரம் போல் கீழே விழுந்த கானோ பாத்திரையின் உடலிலிருந்து ஒரு ஜோதி தோன்றி பாண்டுரங்கனது விக்ரகத்துள் புகுவதை அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் கண்டு மெய் சிலிர்த்தனர். அர்ச்சகர்களுக்கு பயம் ஏற்பட்டது. இவளுக்காக ராஜ சேவகர்கள் வீதியிலே நிற்பதும் அவர்களுக்குத் தெரியும். இவள் உடலை விட்டு உயிர் இறைவனிடம் சேர்ந்த அற்புதத்தையும் கண்டார்கள். இதை வெளியே சொன்னால் தமது கதியாதாகுமோ என்று பயந்தவர்களாய், வெகு சீக்கிரமாகப் பிறர் அறியாமல் கோயிலின் தெற்குப் பிராகாரத்திலே ஒரு குழியைத் தோண்டி பாண்டுரங்கனின் பரம பக்தையான அவளது சரீரத்தை கோயில் மரியாதைகளுடன், விட்டலனின் பிரசாதங்களை அதன் மீது இட்டு, பவித்திரமாகப் புதைத்து, அதன்மீது அடையாளம் தெரியாமல் மறைத்து விட்டார்கள். உடனே ஒரு அதிசயம் நிகழ்ந்தது. புதைத்த மண் ஈரம் உலர்வதன் முன்னம் அங்கே ஒரு அழகிய விருட்சம் தளதளவென்று வளர்ந்து இலையும் பூவுமாக நின்றது கண்டு திகைத்தார்கள் பக்தர்கள். புனிதமான ஆடி ஏகாதசி நாளில் இறைவனுடன் ஒன்றாகக் கலந்து விட்டதைக் கண்ட பக்தர்கள் மெய் சிலிர்த்து கண்ணீர் விட்டமுதார்கள்.
வீதியில் நின்ற ராஜ சேவகர்கள் சூரியன் அஸ்தமிக்கும் வரை காத்திருந்து விட்டுப் பின் கோயிலுக்குள் நுழைந்தனர். உள்ளே கருவறையில் கானோ பாத்திரையைக் காணாமல் திடுக்கிட்டனர். உடனே அர்ச்சர்களைப் பார்த்து ‘‘கானோ பாத்திரை எங்கே?’’ என்று கேட்டு மிரட்டினார்கள்.கோயில் அர்ச்சகர்கள் நடந்த சம்பவங்களை விவரமாக எடுத்துச் சொன்னார்கள். அவர்கள்கூறியதை சிறிதும் நம்பாமல், அர்ச்சகர்கள் கையில் விலங்கிட்டு ராஜசபைக்கு அழைத்துச் சென்றனர்.வேந்தனும் அர்ச்சகர்களைப் பார்த்து ‘‘அந்தப் பெண் கானோ பாத்திரை எங்கே போனாள்?’’ என்று கோபமாகக் கேட்டான். அர்ச்சகர்கள் தாம் கண்டதை அரசரிடம் விவரமாக எடுத்துக் கூறினார்கள். ஆனால் அவர்கள் கூறியதை அரசன் சிறிதும் நம்பவில்லை. வேந்தனும் சேவகர்களின் பேச்சையே நம்பி அர்ச்சகர்களைக் கடுமையாக தண்டிக்க நினைத்தான். அர்ச்சகர்கள் தாங்கள் உண்மையே சொல்லுவதாகச் சொல்லிக் கையிலிருந்து பிரசாதத்தை அளித்து, கானோ பாத்திரையின் வரலாறு முழுவதையும் சொன்னார்கள்.அரசன் சிறிதும் நம்பாமல் அவள் வேறு எங்கேனும் ஒளிந்திருப்பாளோ என்றும் நினைத்துத் தேடவும் ஆட்களை அனுப்பினான். ஆலயத்தின் தெற்குப் பிராகாரத்தில் உள்ள விருட்சம் புதியது என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்டனர். ஆனால் அரசனுக்குக் குழப்பமாக இருந்தது.
ஆனால், அர்ச்சகர்கள் அரசனுக்கு அளித்த பிரசாதத்தில் இருந்த மாலையில் ஒரு நீண்ட ரோமம் இருப்பது கண்டு கோபங்கொண்ட அரசன், ‘‘இறைவனுக்குச் சூட்டிய மாலையில் ரோமம் எப்படி வந்தது?’’ என்றான். அர்ச்சகர் உடனே, ‘‘அது பாண்டுரங்கனது சிகையாக இருக்கலாம்!’’ என்றார்.சற்று மனம் மாறிய அரசன் அர்ச்சகர் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்குமோ? என்று எண்ணிய அரசன் கானோ பாத்திரை விஷயத்தையும் பார்க்க எல்லாமென்று ஆலயத்துக்கு வர பாண்டுரங்கள் அரசனுக்குக் குடுமியோடு காட்சி தந்தான். புதிதாக வளர்ந்து நின்ற விருட்சத்தையும் கண்டு திகைத்தான். உடனே தன் தவறை உணர்ந்த அரசன் அர்ச்சகர்களை வணங்கி மன்னிப்புக் கோரினான். விருட்சவடிவாய் நிற்கும் கானோ பாத்திரையிடம் மன்னிப்புக் கேட்டதோடு அந்த விருட்சத்தையும் மும்முறை வலம் வந்து வணங்கி, ‘‘தாயே, வயதிலே சிறியவரான தங்களது ஒப்புயர்வற்ற பக்தி மனிதரில் கடையரான
என் கண்களையும் திறந்தது. அறியாமல் தீய நினைவுகள் கொண்டு தங்களுக்கு அபசாரம் செய்து விட்டேன். இனி என் வாழ்நாள் முழுவதும் பாண்டுரங்கனுக்குப் பணி செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்வேன். தாயே, இது சத்தியம், சத்தியம், சத்தியம்!’’ என்று அந்த மரத்தடியிலே ஆணையிட்டான். மன்னிப்புக் கோரினான்.
இதன்பின் அவ்வரசன் நெடுநாட்கள் பக்திப் பிரசாரம் செய்தும், பல நற்பணிகள் செய்தும் பாண்டுரங்கனின் திருவடித்தாமரைகளிலே சலியாத பக்தி செய்து நல்வாழ்வு வாழ்ந்து முக்தி பெற்றான் என்று வரலாறு சொல்கிறது. பண்டரீபுரத்திலே மூல கர்ப்ப கிருகத்திலே விட்டலன் மட்டும் தான் நிற்கிறான். பாண்டுரங்கனின் கோயிலில் உள்ள தெற்கு பிராகாரத்தில் ஒரு பிரம்மாண்டமான மரம் நிற்கிறது கப்பும் கிளையுமாக பிராகாரத்திற்கே நிழலிட்டுக் கொண்டு நிற்கிறது. பச்சைப் பசேல் என்று இலைகள், சூரிய ஒளியில் பளபளக்கின்றன. பண்டரிபுரம் கோயிலுக்கு வருகிற ஒவ்வொரு மராட்டியரும் இந்த மரத்தைத் தொட்டு தரிசித்து, நமஸ்கரித்து, கண்களில் ஒற்றிக் கொள்ளாமல் போவதில்லை. அம்மரத்தின் இலைகளை ஒரு கோயில் பிரசாதமாகவே அவர்கள் கருதுகிறார்கள். கானோ பாத்திரையின் கதையைக் கேட்டு பக்திப் பெருக்கோடு கண்ணீர் வடிப்பவர்களும் உண்டு.தமிழ் நாட்டில் முருகன் போலவும், ஆந்திராவில் வெங்கடாசலபதி போலவும், கேரளாவில் அய்யப்பன் போலவும், ஒடிசாவில் ஜகந்நாதர் போலவும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பாலானோர் வழிபடும் தெய்வம் பண்டரீபுரத்தில் உள்ள பாண்டு ரங்க விட்டல். விட்டலும் வார்காரி இன சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கும் மராத்திய மக்களின் வாழ்வோடு இயைந்து அவர்கள் பன்பிலே ஊறிவிட்ட வழிபாடு. பல குருமார்களின் பாதுகைகளை பல்லக்கில் சுமந்து பண்டரீபுரம் செல்லும் கடல் போன்ற மக்கள் வெள்ளம் இதை உறுதிப் படுத்துகிறது. ஆடி ஏகாதசியில் நடைபெறும் பெருந் திருவிழாவில் முப்பது லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பல்வேறிடங்களிலிருந்து நடை பயணமாக வந்து பாண்டுரங்கனை தரிசித்து விட்டு நடைபயணமாகவே ஊர் திரும்பும் அற்புத யாத்திரை. இந்த மாபெரும் நீண்ட யாத்திரையின் பெருமையை ‘கின்னஸ்’ சாதனை புத்தகம் போற்றிப் பதிவு செய்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ‘சந்திரபாகா’ எனும் பீமா நதிக்கரையில், ஷோலாப்பூரிலிருந்து சுமார் 64 கிலோ மீட்டர் தொலைவில் பண்டரீபுரம் அமைந்துள்ளது.
The post பாண்டுரங்க விட்டலா! பண்டரிநாத விட்டலா! appeared first on Dinakaran.