இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'பாட்டல் ராதா'. பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள 'பாட்டல் ராதா' திரைப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ள பாட்டல் ராதா திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப் படம் இன்று வெளியானது.
'பாட்டல் ராதா' படத்தை பார்த்து அழுதுவிட்டதாக ஏற்கனவே நடிகர் மணிகண்டன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 'பாட்டல் ராதா' படத்தை பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ், 'இந்தப் படம் முக்கிய திரைப்படமாக மாறும்' என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பாட்டல் ராதா திரைப்படம் வெளியீட்டை ஒட்டி, இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'பாட்டில் ராதா பார்த்தேன். சமூகம் முற்றிலுமாக ஒதுக்கி வேண்டவே வேண்டாமென்று விலக்கி வைத்த ஒரு மனிதனின் கதையை தன் நேர்த்தியான நேர்மையான திரைக்கதையின் மூலம் இங்கு தனித்துவிடப்பட்ட ஒவ்வொரு தனிமனிதனின் பிழைகளும் வலிகளும் முட்டாள்தனங்களும் இச்சமூகத்தின் பிழைகளே இச்சமூகத்தின் வலிகளே என்னும் வாழ்வியல் அறத்தை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் தினகர். இயக்குநருக்குக்கும் மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களும் பிரியமும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இப்படத்தின் பிரீமியர் காட்சியை பார்த்து முடித்த மாரி செல்வராஜ் , "சின்னதாக ஆரம்பிக்கக்கூடிய சில பழக்கவழக்கங்கள் நம் குடும்பத்தையும் சமூகத்தையும் பாழாக்குகிறது என்பதை சொல்லக் கூடிய படம். இது படமா இல்லை பக்கத்து வீட்டில் நடக்கும் வாழ்க்கையா என யோசிக்கிற அளவிற்கு நேர்த்தியாக எடுக்கப் பட்டுள்ளது. இந்தப் படம் சமூகத்துக்கு மிகவும் அவசியமான படம். குரு சோமசுந்தரம் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இந்தக் கதை யாருக்குமே அந்நியப்பட்டது கிடையாது. நிச்சயம் இந்த படம் முக்கிய படமாக இருக்கும்" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.