
சென்னை,
அஜித்குமார் நடிப்பில் ஏப்ரல் 10-ம் தேதி 'குட் பேட் அக்லி' படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இதற்கிடையில், இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் 'குட் பேட் அக்லி' பட தயாரிப்பு நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், 'என் ஜோடி மஞ்ச குருவி', 'இளமை இதோ', 'ஒத்த ரூபாயும் தாரேன்' என்ற 3 பாடல்களை அனுமதியின்றி 'குட் பேட் அக்லி' படத்தில் பயன்படுத்தியுள்ளதால் ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேலும் பாடல்களை ஒரு வாரத்திற்குள் படத்தில் இருந்து நீக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார் இளையராஜா.
இது குறித்து குட் பேட் அக்லி படக்குழு விளக்கம் அளித்திருக்கிறது. அதாவது, "குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களுக்கு சம்பந்தப்பட்ட இசை கம்பெனிகளிடம் முறையே அனுமதி பெற்ற பிறகே பயன்படுத்தினோம். அந்த இசை நிறுவனங்களிடம் தான் காப்புரிமை இருக்கிறது. அதனால் அவர்களை தொடர்பு கொண்டு தடையில்லா சான்று பெற்றோம். எல்லாம் முறைப்படியே செய்திருக்கிறோம்" என்று தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெரிவித்துள்ளது.