பாடகர் மனோவின் மனைவியை தாக்கிய வழக்கில் 2 பேர் கைது: வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு

3 months ago 18

பூந்தமல்லி: சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவிகுப்பம் மெயின் ரோடு, ராதா அவென்யூ பகுதியில் பிரபல பின்னணி பாடகர் மனோவின் வீடு அமைந்துள்ளது. கடந்த மாதம் இவரது வீட்டின் அருகே விளையாட்டு பயிற்சிக்கு சென்றுவிட்டு நடந்து சென்ற நபர்களுக்கும், மனோவின் மகன்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இரு தரப்பும் மாறிமாறி தாக்கிக் கொண்டனர்.

இதில் காயம் அடைந்த நபர்கள் அளித்த புகாரின்பேரில் பாடகர் மனோவின் வீட்டில் பணிபுரிந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பாடகர் மனோவின் 2 மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர்கள் முன்ஜாமீன் பெற்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் மனோவின் மனைவி ஜமீலா (60), வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் தன்னை தாக்கிவிட்டு காரில் இருந்த ₹2 லட்சத்து 50 ஆயிரம் பணம், 12 சவரன் நகைகளை எடுத்துச் சென்றதாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த கிருபாகரன் (20) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 2 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் காரில் இருந்து நகை, பணம் எடுத்துச் செல்லவில்லை என்பது தெரியவந்தது. ஆனால் மனோவின் மனைவியை தாக்கிய சம்பவத்தில் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வருகின்றனர்.

The post பாடகர் மனோவின் மனைவியை தாக்கிய வழக்கில் 2 பேர் கைது: வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article